பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆன்லைன் ஆய்வு தெரிவிக்கிறது.
உலக அளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதால், பாலியல்ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படையாகக் கூறுமாறு, கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில், சமூக வலைத்தளமான ட்விட்டரில் ‘மீடூ’ என்ற ஹேஷ்டேக் போட்டு, அதில் தகவல்களைப் பகிருமாறு கோரப்பட்டது.
அமெரிக்காவில் அண்மையில், ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே வெய்ன்ஸ்டெய்ன் மீது 70க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைப் புகார்களைக் கூறினர். இதையடுத்து, ஹாலிவுட் நடிகை அலிசா மிலானோ ஒரு பிரச்சாரத்தை தொடங்கினார். அதன்படி, அமெரிக்காவில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மீ டூ (Mee Too) என்ற பிரசார இயக்கம் தொடங்கப்பட்டது. இதன் விளைவாக, அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் ஓரளவு குறைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
‘மீ டூ’ என்ற தலைப்பின் கீழ் இந்த பிரச்சாரம் வைரலாக பரவியது. இந்நிலையில், பெண்களுக்கு ஆபத்தான நாடுகள் குறித்து உலகளாவிய வல்லுநர்கள் கொண்ட குழு கருத்துக் கணிப்பு நடத்தியது. இது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஐநாவில் உறுப்பினராக உள்ள 193 நாடுகளைச் சேர்ந்த 550 வல்லுநர்களிடம் ஆய்வு நடத்தியதாம். இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
இதில் உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இந்தியா பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் முதல் 10 நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் இரண்டாம் இடத்திலும், சிரியா மூன்றாமிடத்திலும் உள்ளன. சோமாலியா, சௌதி அரேபியா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. பாகிஸ்தான் 6 ஆவது இடத்திலும், அமெரிக்கா 10 ஆவது இடத்திலும் உள்ளன.
இந்தியாவைப் பொறுத்த அளவில், நிர்பயா விவகாரத்திற்குப் பிறகும், பெண்கள் பாதுகாப்பு குறித்து போதிய விழிப்புணர்வோ, தடுப்பு நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லையாம்.
இந்தியாவில் 2007 – 2016க்கு இடைப்பட்ட பத்தாண்டில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 83 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், ராய்ட்டர்ஸ் தெரிவிக்கும் இந்த ஆய்வு முடிவில், குடும்ப வன்முறை மற்றும் உளவியல் சிதைவு போன்ற பாதிப்புகளே இந்தியாவில் அதிகம் காணப்படுவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.




