ஹிந்து உணர்வைப் புண்படுத்தும் வகையில் பேச்சு: பிக்பாஸ் நடிகர் ஊருக்குள் நுழைய 6 மாதம் தடை!

திங்கள் கிழமை தெலங்கானா போலீஸார், நடிகரும் விமர்சகருமான மகேஷ் கதியை ஹைதராபாத்துக்குள் இன்னும் 6 மாத காலத்துக்கு நுழைவதற்கு தடை விதித்திருக்கிறார்கள். தெலங்கானா சமூக விரோத செயல்கள் தடுப்புச் சட்டம் 1930ன் கீழ் மகேஷ் கதிக்கு இந்த விதமான தண்டனை கொடுக்கப் பட்டிருப்பதாக போலீஸார் கூறினர்.

ஹிந்து கடவுள்களை இழிவாகப் பேசியதற்காக, தெலுங்கு திரைப்பட நடிகரும், சினிமா விமர்சகருமான, மகேஷ் கதிக்கு 6 மாதங்களுக்கு ஹைதராபாத் நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் வசித்து வரும் மகேஷ் கதி, தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். சினிமா விமர்சகராகவும் இருந்து வருகிறார்.

தெலுங்கு ‘டிவி’ சேனலில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலம் அடைந்தார். அடிக்கடி டிவி விவாதங்களில் பங்கேற்கும் மகேஷ் கதி, சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்துகளைக் கூறி, பார்வையாளர்களின் கோபத்துக்கு ஆளாவார். அண்மையில் தெலுங்கு ‘டிவி’ சேனலில் நடந்த விவாதத்தில் பங்கேற்ற மகேஷ் கதி, அந்த நிகழ்ச்சியில் ஹிந்து கடவுள்களான ராமர், சீதை குறித்து தரக் குறைவான விமர்சனங்களைக் கூறினார்.

இதனால் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அவரது கருத்துகளுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவருக்கு எதிராக பல இடங்களில் போலீஸாரிடம் புகார்களும் கொடுக்கப் பட்டன. இதை அடுத்து போலீஸார் மகேஷுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் அவரை தெலங்கானா மாநிலத்தில் இருந்து ஆறு மாத காலத்துக்கு வெளியேற்ற முடிவு செய்த போலீசார் ஆந்திர மாநிலத்தில் உள்ள மகேஷின் சொந்த ஊரான சித்துாரில் இறக்கிவிட்டு வந்தனர். மகேஷ் கதி ஆறு மாதத்துக்கு தெலங்கானா மாநிலத்தின் ஐதராபாத் நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.