ரஜினியை கச்சிதமாக காலியாக்கிய பா.ரஞ்சித்! கொடுத்த வேலையை முடித்ததற்கு ராகுல் பாராட்டு!

ரா...ரா..ரா... ராமய்யா எட்டுக்குள்ளே உலகம் இருக்கு ராமய்யா என்று பாட்டுப் பாடிக் கொண்டிருந்த ர...ர...ரஜினி, இன்று ரா...ர... கூட்டணியில் எட்டிவிடக்கூடிய வாழ்க்கையை இழந்து எட்டா நிலையில் அமர்ந்துவிட்டார் என்பதுதான் அரசியல் உண்மை!

ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கனக் கச்சிதமாக முடிவுக்குக் கொண்டுவரப் பாடுபட்ட இயக்குனர் பா.ரஞ்சித்தை தானே வலியவந்து சந்தித்து கைகுலுக்கிப் பாராட்டு தெரிவித்தார் ராகுல் காந்தி. இதனை தன் டிவிட்டர் பக்கத்திலும் பெருமை பொங்க பதிவு செய்துள்ளார் ராகுல்.

அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கிய சினிமா இயக்குனர் பா.ரஞ்சித்தையும் நடிகர் கலையரசனையும் தில்லியில் நேற்று சந்தித்தேன். நாங்கள் அரசியல், சினிமா, சமூகம் குறித்து பேசினோம். அவருடனான உரையாடலை நான் ரசித்தேன். இந்தப் பேச்சுகள் இனியும் தொடரும்… என்று தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து கூறிய பா.ரஞ்சித், ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளியான பேரறிவாளனை விடுவிப்பதில் தங்கள் குடும்பத்திற்கு ஆட்சேபம் இல்லை என்று ராகுல் காந்தி கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

சுமார் 3 மணி நேரம் ராகுல் காந்தியுடன் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறிய ரஞ்சித், காலா படம் மிகவும் பிடித்திருந்ததாக ராகுல் காந்தி கூறினார் என்றார். பின்னர் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக வேண்டுகோள் விடுத்த போது, விடுதலைக்கு நாங்கள் தடையாக இருக்க மாட்டோம் என்றும் தன்னால் முடிந்த வரை அவருக்கு உதவி செய்வோம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்ததாக ரஞ்சித் கூறினார்.

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியான பேரறிவாளனை விடுவிப்பதில் தங்களது குடும்பத்திற்கு ஆட்சேபம் ஏதும் இல்லை என்றும் ராகுல் தெரிவித்ததாக ரஞ்சித் கூறினார்.

இருப்பினும், பா.ரஞ்சித் ரஜினிகாந்தின் அரசியல் ஆசைகளை, அரசியல் எதிர்காலத்தை முடித்து வைத்ததற்காக ராகுல் காந்தி அழைத்துப் பாராட்டியதாகவே இந்த நிகழ்வு பார்க்கப் படுகிறது.

காரணம், பாஜக.,வுடன் ரஜினியை இணைப்பதில் ஆர்வம் காட்டிய நரேந்திர மோடி, ரஜினியின் வீட்டுக்கே சென்று நட்புக் கரம் நீட்டினார். ஆனால் ரஜினி கைகுலுக்கியதுடன் நின்று கொண்டார் தற்காலிகமாக! இருப்பினும், தனது அரசியல் பிரவேசத்துக்கு ஒரு பின்னணியும் பலமும் வேண்டும் என்பதை அவர் எதிர்பார்த்தே இருந்தார்.

ஜெயலலிதா, கருணாநிதி என்ற இருபெரும் ஆளுமைகள் இல்லாத தமிழகத்தில் தலைமை வெற்றிடம் கண்டுள்ள சூழலில், ரஜினியின் தலைமையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த பாஜக., தயாராகி வந்த நிலையில், அதனை முறியடிக்க பல்வேறு திட்டங்களை எதிர்க்கட்சிகளும் தீட்டி வந்தன. ரஜினியின் இமேஜை உடைக்கும் வேலைகளில் அவை இறங்கின. ஊடகங்களில் பிரசாரம் பலப் பட்டது. சமூக ஊடகங்கள் காறித் துப்பின. ரஜினியை கழுவிக் கழுவி ஊத்தினார்கள். தனிப்பட்ட வாழ்க்கையைக் கேள்வி கேட்டார்கள். தமிழன், மராட்டியன், கன்னடன் என்று பிரிவினை பேசினார்கள் அரசியல் மட்டத்தில்.

இவ்வளவு செய்தும் அசைக்காத ரஜினியை, ஒரே ஒரு படம் குப்புறத் தள்ளிவிட்டது என்றால் அது ‘காலா’ படம் மட்டுமே! இயக்குனர் பா.ரஞ்சித் அந்த வேலையை கனக்கச்சிதமாக செய்ததாகவே அரசியல் மட்டத்திலும் ஊடக மட்டத்திலும் பேச்சு பரவலானது. ரஜினியின் இமேஜை உடைக்கும் விதமாகவே, சாதியம் பேச வைத்து, அரசியல் வசனங்களை வைத்து, பாஜக., எதிர்ப்பு அரசியல், தேசிய எதிர்ப்பு வசனங்களை முன்வைத்து, ஒரு பிரசாரப் படத்தைக் கொண்டு வந்தார் பா.ரஞ்சித்.

இந்தப் படத்தில் நடிக்கும் போதே தன் இமேஜ் எப்படி பாதிக்கப்படும் என்ற குறைந்த பட்ச எண்ணம் கூட இல்லாமல் ரஜினி தனக்குத் தானே தன் மருமகன் தனுஷின் தயாரிப்பு மூலம் குழி வெட்டிக் கொண்டார் என்றுதான் பார்க்கப் படுகிறது. அதனை உறுதி செய்யும் வகையில், பாஜக.,வுடனான ரஜினியின் நெருக்கத்தை அறுத்துவிட காங்கிரஸ் எப்படி முயன்றுள்ளது என்பதை இன்றைய சந்திப்பின் மூலம் ராகுலும் ரஞ்சித்தும் காட்டி விட்டார்கள்…

ரா…ரா..ரா… ராமய்யா எட்டுக்குள்ளே உலகம் இருக்கு ராமய்யா என்று பாட்டுப் பாடிக் கொண்டிருந்த ர…ர…ரஜினி, இன்று ரா…ர… கூட்டணியில் எட்டிவிடக்கூடிய வாழ்க்கையை இழந்து எட்டா நிலையில் அமர்ந்துவிட்டார் என்பதுதான் அரசியல் உண்மை!