ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 21-ஆம் தேதி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு அநீதி இழைத்து விட்டது. இதை கண்டித்து 24-ஆம் தேதி ஆந்திரத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார். இதனை அடுத்து ஆந்திரத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் காலை 6 மணிக்கு தொடங்கியது. இதனால் ஆந்திர மாநிலத்தில் பேருந்துகள் இயக்கப்பட வில்லை. எந்த கடைகளும் திறக்கப்படவில்லை. இதனால் திருப்பதி சென்ற தமிழக பக்தர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் நிலைமை சீரான பிறகு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அதிகாரிகள் கூறியுள்ளனர். தமிழகத்திலிருந்து புறப்பட்ட பேருந்துகள் ஆந்திர எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



