கருணாநிதி உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க ராகுல்காந்தி இன்று மாலை ராகுல் காந்தி சென்னை வரவுள்ளார்.
தமிழக அரசியல் களத்திலும், இந்திய அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கி வருபவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. உடல்நலம் பாதிக்கப்பட்டு, கோபாலபுரம் வீட்டிலேயே டாக்டர்களின் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதிக்கு, கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் உடல் நிலை மோசமானது. இதைத்தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் காவேரி ஆஸ்பத்திரிக்கு கருணாநிதி கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் மருத்துவர்களின் 24 மணி நேர கண்காணிப்பில் கருணாநிதி இருந்து வருகிறார்.
தொடர்ந்து 4-வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள கருணாநிதியின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் உடல் நிலை பற்றிய தகவலை அறிந்து கொள்வதற்காக மருத்துவமனை வளாகத்திலும் தொண்டர்கள் கூட்டம் நிரம்பி உள்ளது. இதனால், தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கருணாநிதியின் உடல் நிலை பற்றி நேற்று மாலை மருத்துவ அறிக்கை எதுவும் வெளியிடப்படாத நிலையில், இன்று மருத்துவ அறிக்கை வெளியிடப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரிக்க அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர், தொடர்ந்து மருத்துவமனைக்கு நேரில் வந்து உடல் நலம் பற்றி கேட்டறிந்து வருகின்றனர். அந்த வகையில், இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகை தர உள்ளார். இன்று மாலை 4 மணியளவில், காவேரி மருத்துவமனைக்கு வருகை தரும் ராகுல் காந்தி, கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ராகுல் காந்தி வருகை தர உள்ளதால், மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



