ஆண் துணையின்றி, பெண்கள் தனியாக சுற்றுலா செல்லும் நடைமுறை அதிகரித்துள்ளதாக, உள்நாடு, வெளிநாடுகளுக்கான சுற்றுலாக்களை ஏற்பாடு செய்யும், தனியார் நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. இது குறித்து, சுற்றுலா துறையில் சிறந்து விளங்கும் தனியார் நிறுவனங்கள் கூறியதாவது: கடந்த ஆண்டுகளை விட, தற்போது, பெண்கள் சுற்றுலா செல்வது அதிகரித்துள்ளது. அதிலும், தனியாக சுற்றுலா செல்லும் பெண்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும், 11 சதவீதம் அதிகரித்து வருகிறது. ‘ஆன்லைன்’ மூலம், தனியாக சுற்றுலா செல்ல முன்பதிவு செய்வோரில், 75 சதவீதம் பேர் பெண்களே. ஓய்வெடுப்பதற்காக, கோவா, கொச்சி, ஜெய்ப்பூர், கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு செல்கின்றனர். துபாய், தாய்லாந்து, சிங்கப்பூர், பிரிட்டன், மலேஷியா போன்ற வெளிநாடுகளுக்கு, அதிக அளவில் பெண்கள் தனியாக சுற்றுலா செல்ல விரும்புகின்றனர். ஆண்கள் இல்லாமல், பெண்கள் மட்டுமே குழுக்களாக சுற்றுலா செல்வது அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளன.




