பாரதத்தின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் துவங்கியது. அவருக்கு தொண்டர்கள் திரண்டு பிரியாவிடை அளித்தனர்.
93 வயதான அடல் பிஹாரி வாஜ்பாய் நேற்று தில்லியில் காலமானார். அவரது உடல் நேற்று இரவில் தில்லி கிருஷ்ண மேனன் பார்க்கில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து வந்த அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல், முற்பகல் 10 மணி அளவில் அவரது வீட்டில் இருந்து ராணுவ வாகனம் மூலம் தில்லி தீன்தயாள் உபாத்யாய மார்க் பகுதியில் உள்ள பாஜக., தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் பிற்பகல் 2 மணி அளவில் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. கூடியிருந்த தொண்டர்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தனர்.
அவரது இறுதி ஊர்வலம் தீன் தயாள் உபாத்யாய மார்க், பகதூர் ஷா ஜபார் மார்க், தில்லி கேட், நேதாஜி சுபாஷ் மார்க், சாந்தி வேன் வழியாக ராஷ்ட்ரீய ஸ்ம்ருதி ஸ்தல்லை அடைந்ததும் இறுதி மரியாதை செலுத்தப் படுகிறது. அதன்பின் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்படுகிறது.




