கேரளாவில் வெள்ள பாதிப்பை நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி, முதல்வர் பினராயி விஜயன், அதிகாரிகளுடன் நிவாரணப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
கேரளாவில் காசர்கோடு தவிர மற்ற மாவட்டங்களில் மழை வெள்ளம் கடுமையாக சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 324 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களாக வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, சுமார் 3 லட்சம் பேர் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.
இந்நிலையில் கேரளாவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ள சேதத்தை பார்வையிட பிரதமர் மோடி கேரளம் வந்தார். காலை 8 மணி அளவில் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் பிணரயி விஜயன் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். அங்கிருந்து கொச்சி கடற்படை தளத்திற்கு சென்ற பிரதமருடன் முதலமைச்சர் பினராயி விஜயன் சென்றார்.
கொச்சியில் முதலமைச்சர் பிணரயி விஜயன், மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் மற்றும் மாநில அரசின் உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். மீட்புப்பணிகள் மற்றும் நிவாரண பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப் பட்டது.
இதனிடையே இந்த கூட்டம் குறித்து தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்த மோடி, கேரள மக்களின் ஒற்றுமைக்கு தலை வணங்குவதாகக் குறிப்பிட்டார்.
I salute the people of Kerala for their fighting spirit. I compliment the authorities for their efforts in this adverse situation.
I would also like to appreciate the wide support and solidarity from people across India towards Kerala during this unprecedented situation.
— Narendra Modi (@narendramodi) August 18, 2018
வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட பின்னர் கேரளா மாநிலத்திற்கு முதல் கட்டமாக, உடனடியாக ரூ.500 கோடி நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்தத் தொகை வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்கவும், உதவிகளை வழங்கவும் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







