கேரளாவில் கனமழை எதிரொலி 29 ரயில்கள் முழுமையாகவும் 12 ரயில்கள் பகுதி தூரமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகம் வழியாக சில ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 29 ரயில்கள் முழுமையாகவும், 12 ரயில்கள் பகுதி தூரமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி சில அணைகளும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலமே மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வெள்ளம் காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
குறிப்பாக, நேற்று தமிழகத்தில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், கேரளாவிற்கு இயக்கப்பட்ட ரயில்கள், கேரளாவில் இருந்து வெளிமாநிலங்களுக்கு இயக்கப்பட்ட ரயில்கள் பாதிக்கு மேல் ரத்து செய்யப்பட்டன.
அதன்படி, துரந்தோ, சதாப்தி உள்ளிட்ட 29ரயில்கள் முழுமையாகவும், 12 ரயில்கள் பகுதி தூரமாகவும் ரத்து செய்யப்பட்டன. ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ், கொச்சுவேலி-பெங்களூர் எக்ஸ்பிரஸ், குருதேவ் எக்ஸ்பிரஸ் ஆகிய 3 ரயில்களும் தமிழகம் வழியாக இயக்கப்பட்டன.




