மறைந்த ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் மூத்த மகன் நந்தமூரி ஹரிகிருஷ்ணா இன்று அதிகாலை சாலைவிபத்தில் உயிரிழந்தார். ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையும் மறைந்த என்.டி.ராமாராவின் மூத்த மகனுமான நடிகர் ஹரிகிருஷ்ணா இன்று அதிகாலையில் தெலுங்கானா மாநிலம் நலங்கொண்டா அருகே காரில் சென்றுக் கொண்டிருந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. கார் தலைகீழாகக் கவிழ்ந்ததால், படுகாயம் அடைந்த ஹரிகிருஷ்ணா மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
2008ம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர் ஹரிகிருஷ்ணா. ஹரிகிருஷ்ணாவின் மற்றொரு மகனான ஜானகிராம் 2014ம் ஆண்டில் இதே போல் ஒரு கார்விபத்தில் பலியானது குறிபிடத்தக்கது.



