பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 17 ஆம் தேதி தனது 68 வது பிறந்த நாளை வாராணசியில் கொண்டாடுகிறார். மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இருந்து வரும் பள்ளி மாணவர்களுடன் தனது நேரத்தை அவர் செலவிடுவார் எனத் தெரிகிறது.
பிறந்த நாளைக் கொண்டாடும் பிரதமரை வரவேற்பதற்காகவும் மோடியின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையிலும், புனிதமான காசி நகரம் விழாக் கோலம் பூணுகிறது. பிரதமரின் இரண்டு நாள் காசி நகர் வருகையைப் பற்றிய தகவல்கள் கிடைத்தவுடன் மாவட்ட நிர்வாகம் பம்பரமாகச் சுற்றி வருகிறது.
பிரதமரின் பயணம்
வாராணசி மாவட்டத்தின் காசி வித்யபீட் ப்ளாக்கில் அமைந்துள்ள நரவூர் கிராமத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகளுடன் சந்தித்து உரையாடுவார் மோடி என்று பாரதீய ஜனதா கட்சி (BJP) யின் மாவட்ட ஊடக பொறுப்பாளர் ஞ்யானேஷ் ஜோஷி தெரிவித்தார்.
மோடி மாணவர்களுடன் நேரத்தை செலவழிப்பார், அவர்களின் வாழ்க்கை மற்றும் கல்வி பற்றிய முக்கியத்துவம் குறித்து பேசுவார் என்றார் ஜோஷி.
நரவூர்க்குப் பிறகு, ஜெயபூர், நாக்பூர் மற்றும் கக்ரஹியா ஆகிய கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகளுடன் நாள் முழுவதும் செலவழிக்க, டீசல் லோகோமோடி வொர்க்ஸ் (டி.எல்.வெல்) விருந்தினர் இல்லத்திற்கு அவர் செல்கிறார். குழந்தைகளுடன் சேர்ந்து ஒரு திரைப்படம் பார்க்கிறார்.
செப்டம்பர் 18 ம் தேதி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் (பி.ஹெச்.யூ.) அரங்கத்தில் ஒரு கூட்டத்தில் உரையாற்றுகிறார். பிரதமரின் பிறந்த நாளை பிஜேபி தொண்டர்கள் நாள் முழுவதும் பல கொண்டாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மோடி பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், மாவட்டத்தில் 68 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளன. 68 முக்கிய இடங்களும் விளக்குகளுடன் ஒளிரும். பிரதமரின் நலனுக்காக மாவட்டத்தில் 68 கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப் படுகின்றன.
2014 ஆம் ஆண்டில் மோடி முதல் முறையாக வாராணசியில் இருந்துதான் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார்.




