சீன எல்லையில் இருந்து சுமார் 60 கி.மீ., தொலைவில், சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் இன்று பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப் பட்டது.
சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாக்யாங் நகரில் 201 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 5 லட்சம் பயணிகளைக் கையாளும் வசதி கொண்ட விமான நிலையத்தை அமைக்க ரூ.553 கோடி செலவிடப் பட்டுள்ளது.
வரும் அக்டோபர் 8 ஆம் தேதி முதல் இந்த விமான நிலையத்தில் வர்த்தக ரீதியில் போக்குவரத்து தொடங்குகிறது. அன்று இந்த விமான நிலையத்திற்கு முதல் பயணிகள் விமானம் இயக்கப்படுகிறது.
கடல் மட்டத்தில் இருந்து 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த விமான நிலையம், இந்தியப் பொறியாளர்களின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
மலைப்பகுதியில் புதிய தொழில்நுட்ப உதவியுடன் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து 60 கி.மீ., தொலைவில்தான் சீன எல்லை உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. இதில் ராணுவ விமானங்களையும் தரை இறக்கலாம். அதற்கான வசதி உள்ளது.




