புது தில்லி: அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார அவசியம் என்றும், அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என்றும், அதே நேரம் ஆதார் இல்லை என்பதற்காக தனி மனித உரிமைகளை மீறக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.
ஆதார் அட்டைகள், அரசின் நலத்திட்டங்களுக்கு அவசியம் என்று மத்திய அரசு கூறி, அதனை வலியுறுத்தியது. ஆதார் எண்ணுடன் மற்ற பல அட்டைகளையும் இணைப்பதற்கு காலக் கெடு விதித்து அதனை அமல் படுத்த முயன்றது.
இந்நிலையில், ஆதாரை அவசியமாக்கக் கூடாது என்றும், குடிமக்களின் கை விரல் ரேகை உள்ளிட்ட தனிப்பட்ட ரகசியங்களைப் பெற்று, அவர்களுக்கு ஆதார் வழங்கியுள்ளதன் மூலம், இது தனி மனித உரிமையை மீறும் செயல் என்றும் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, இன்று ஆதார் வழக்கில் முக்கியத் தீர்ப்பினை வழங்கியது.
அந்தத் தீர்ப்பில் அரசின் நலத்திட்டங்கள் பெற ஆதார் அவசியம் என்று கூறப் பட்டது. மேலும், ஆதார் எண்ணை போலியாக உருவாக்க முடியாது. குறைந்தபட்ச அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே ஆதார் தகவல்கள் பெறப் படுகின்றன. மேலும், அடையாளத்திற்காக குறைந்தளவு தகவல்கள் கேட்கப்படுவதாகவே நீதிமன்றம் கருதுகிறது.
இந்தியாவில் கடந்த காலங்களில் அதிகமாக பேசப்பட்டது ஆதார். சிறந்ததாக இருப்பதை விட தனித்துவத்துடன் இருப்பது முக்கியம். தனி நபர் சுதந்திரம் பாதிக்கிறது என்பது மட்டுமே பிரச்னையாக உள்ளது. ஆனால், அரசின் பல்வேறு திட்டங்களில் போலிகளை களைய ஆதார் உதவுகிறது.
ஆதார் என்பது மற்ற அடையாள ஆவணங்களைப் போன்றது இல்லை. பின் தங்கிய மக்களுக்கு ஆதார் அதிகாரம் அளிக்கிறது. தனித்துவ அடையாளம் என்பது எளிய மக்களுக்கு அதிகாரம் அளிக்கும்.
இருப்பினும், ஆதாருக்கான சட்ட விதிகளை இன்னும் கடுமையாக்க வேண்டும்.
இந்தத் தீர்ப்பின் மூலம் தனி நபரின் கண்ணியம் பாதுகாக்கப்படும். அதற்கு ஆதார் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வர வேண்டும். ஆதார் மூலம் சமூக நலத் திட்டங்கள் மக்களுக்கு உரிய வகையில் சென்று சேர்கிறது என்ற மத்திய அரசின் வாதம் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனால், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைக் கேட்பது சட்ட விரோதம்.
ஆதார் அரசியல் சாசனப்படி செல்லும். ஆதார் இல்லை என்பதற்காக அடிப்படை உரிமைகளை மறுக்கக் கூடாது. சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறியவர்களுக்கு ஆதார் கிடைக்காது என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்
நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி,
* நீட், சிபிஎஸ்இ தேர்வுகளுக்கு ஆதாரைக் கட்டாயமாக்கக் கூடாது.
* பள்ளிச் சேர்க்கைக்கு ஆதாரை கேட்கக்கூடாது.
* வங்கிக் கணக்குடனும், மொபைல் போன் சேவைக்கும், எண்ணைப் பெறவும், சிம்கார்டு வாங்கவும் ஆதார் தேவையில்லை.
* ஆதார் எண்ணை, எந்த மொபைல் நிறுவனங்களும் கட்டாயமாக கேட்கக் கூடாது.
* நீதிமன்ற உத்தரவு இல்லாமல், பயோமெட்ரிக் தகவல்களை எந்த நிறுவனத்திற்கும் பகிரக் கூடாது.
* ஆதார் தகவல்களை தனியார் நிறுவனங்கள் பெறுவதற்கு தடை .
* ஆதார் இல்லை என்பதற்காக எந்த குழந்தைக்கும் சலுகைகளை மறுக்க கூடாது
* தனிநபர் உரிமையை ஆதார் சட்டம் மீறவில்லை
* பான் அட்டைகள் பெற ஆதார் எண் கட்டாயம்
* வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம்
* ஆதாருக்கு கொடுக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு அங்கீகாரத்தை ரத்து செய்ய இயலாது.!




