டுவிட்டர் தகவல் மூலம் ரயிலில் பசியால் துடித்த குழந்தையின் பசி தீர்த்த ரயில்வே அமைச்சர்

கான்பூர்:

சமூக வலைதளமான, ‘டுவிட்டர்’ மூலம் கிடைத்த தகவலால் ஓடும் ரயிலில் பசியால் துடித்த 5 வயது குழந்தைக்கு பால் மற்றும் பிஸ்கட் வழங்க உடனடியாக வழங்க உத்தரவிட்டு அக்குழந்தையின் பசியைப் போக்கினார் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு.

உத்தரப்பிரதேச மாநிலம் மந்துவாடி ரயில் நிலையத்திலிருந்து தில்லிக்கு அதிவேக விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இதில் குசும் யாதவ் என்ற பெண் தன் ஐந்து வயது மகன் அவிஸ் உடன் வாரணாசியில் உள்ள மந்துயாதிஹ் ரயில் நிலையத்தில் ஏறினார். வட இந்தியாவில் கடும் பனிமூட்டத்தின் காரணமாக, ரயில் மிகவும் மெதுவாகச் சென்றதால், ரயிலில் உணவுப் பொருள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால், பசியால் அழுத தன் மகனுக்கு, பால் கூட வாங்கிக் கொடுக்க முடியாமல், குசும் தவித்தார்.

என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த குசும் யாதவ் தனது கணவர் சத்யேந்த்ரா யாதவுக்கு போன் மூலம் தகவலைக் கூறினார். சத்யேந்த்ரா தில்லியில் இருந்ததால் தன்னால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தவருக்கு உடனே ஒரு யோசனை வந்தது. சமூக வலைத்தளமான டுவிட்டரின் மூலம் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவின் பக்கத்தில், தனது மகன் பசியால் துடித்துக் கொண்டிருக்கிறான். தாங்கள் உடனே உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்தத் தகவலைப் பார்த்த அமைச்சர் சுரேஷ் பிரபு துரித நடவடிக்கை மேற்கொண்டார். அவர் உடனே அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு அந்த ரயில் எங்கு வந்து கொண்டிருக்கிறது என்பதை உறுதி செய்து அந்த சிறுவனுக்கு உடனே பால் மற்றும் பிஸ்கட் வழங்கி உதவிட உத்தரவிட்டார்.

உடனே அலகாபாத் டிவிஷனல் ரயில் மானேஜர் நடவடிக்கை எடுத்தார். அதன்படி அந்த ரயில் படேஹ்பூர் ரயில் நிலையம் வந்தபோது ஸ்டேஷன் மாஸ்டர் அவர்கள் இருவருக்கும் உணவு வழங்கினார். மேலும், அந்த ரயில் கான்பூரை வந்தடைந்தபோது ரயில்வே அதிகாரிகள் காத்திருந்து பால் மற்றும் பிஸ்கட் வழங்கினார்கள். பசியாக இருந்த தனது மகனுக்கு உடனடியாக உணவு வழங்கிய அதிகாரிகளுக்கும், அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கும் அந்தத் தாய் குசும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.