சபரிமலையை கலவர பூமியாக மாற்ற ஆர்எஸ்எஸ் முயற்சி செய்து வருவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து சங் பரிவார் அமைப்புகள் உட்பட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சபரிமலையை கலவர பூமியாக்க ஆர்.எஸ்.எஸ். முயல்கிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
வெளிநாடு சென்றுள்ள பினராயி விஜயன் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
சபரிமலை கோவிலுக்கு உள்ள தனித்தன்மையை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக்கொண்டதில்லை.
எந்த மதத்தை சேர்ந்தவரும் வழிபடக் கூடிய தனித்தன்மை கொண்டது சபரிமலை. ஆதிவாசிகள் பூஜை செய்து வந்த கடந்த கால சம்பிரதாயத்தை ஒழித்துக் கட்டியது சங்பரிவார் போன்ற அமைப்புகள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சாதி மேலாதிக்கத்தை நிறுவும் எண்ணத்தோடு சபரிமலையில் இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
இந்த நிலை தொடர்ந்தால் பிற்படுத்தப் பட்டவர்கள் சபரிமலையில் இருந்து அகற்றப் படுவார்கள் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.




