இதுவரை எந்த பெண்களும் சபரிமலை கோயில் உள்ளே செல்லவில்லை என பத்தனம்திட்டா ஆட்சியர் கூறியிருந்த நிலையில், பம்பையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சபரிமலையில் ஐயப்பனை தரிசிப்பதற்காக தெலுங்கானாவைச் சேர்ந்த தனியார் டிவி செய்திவாசிப்பாளர் கவிதா மற்றும் கொச்சியை சேர்ந்த இருமுடி கட்டிய பெண் பக்தர்கரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை சென்றனர்.
தலைகவசம் அணிந்து, போலீஸ் உடையில் பத்திரிக்கையாளர் கவிதா, 200 போலீசார் புடைசூழ சன்னிதானம் வரை சென்றார். பெண்கள் இருவரும் நடைபந்தல் பகுதியை அடைந்த போது, சன்னிதானம் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சன்னிதானம் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
கவிதாவை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என முழக்கமிட்ட அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர்கள் கவிதை உள்ளே அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக கூறி விட்டனர். இதனால் போலீசார் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்திய பக்தர்களுடன் பேசிய போலீஸ் அதிகாரி, உங்களது கோரிக்கையை அரசுக்கு நான் தெரிவித்துள்ளேன். இதற்கிடையில் அவரும் ஐயப்பனை தரிசிக்க வந்துள்ளார். அவரிடமும் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். அதுவரை நீங்கள் அமைதி காக்க வேண்டும் என தெரிவித்தார்.





