
ஐப்பசி மாத பூஜை நிறைவு பெற்றதும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்றிரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.
எல்லா வயது பெண்களையும் சபரிமலை கோவிலுக்கு அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய பின்னர் ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 17-ம் தேதி நடை திறக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சபரிமலைக்கு வந்த 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதுவரை 8 பெண்கள் சபரிமலைக்கு வந்ததாகவும் யாரும் கடைசி வரை கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் மாறுவேடத்தில் பெண்கள் யாரும் உள்ளே வந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.
10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்பதில் ஐயப்ப பக்தர்கள் உறுதியாக உள்ளனர். இருப்பினும் பக்தர்கள் போராட்டம் காரணமாக 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதற்கிடையே கோவிலின் ஐதீகத்திற்கு எதிராக பெண்கள் அனுமதிக்கப்பட்டால் கோவிலை மூடிவிடுவோம்என அரசுக்கு கோவில் நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது. இதற்கான மேல்முறையீட்டிற்கான மனுவினை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்குமா என்பது நாளை கூறப்படும் தீர்ப்பில் தெரியவரும் நிலையில், 17-ம் தேதி திறக்கப்பட்ட கோவில் நடை இன்று இரவு 10 மணிக்கு சாத்தப்படுகிறது. மீண்டும் அடுத்த மாதம் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட உள்ளது.
பம்பை மற்றும் நிலக்கல் பகுதியில் உள்ள ஊடகவியலாளர்கள் மீது கடைசி நாளில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு கருதி அவர்கள் அங்கிருந்து செல்லுமாறு போலீஸ் உத்தரவிட்டுள்ளது.



