சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று கூறி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஏற்பட்ட பதற்றத்தால், மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப் பட்டது. இந்த மனுக்கள் மீது நவ.13ம் தேதி விசாரணை நடத்தப் படும் என்று உச்ச நீதிமன்றம் இன்று கூறியது.
சபரிமலை ஐயப்பன் சந்நிதி நடை 5 நாட்களுக்குப் பிறகு நேற்று இரவு மூடப்பட்டது. சபரிமலைக்கு அனைக்கு வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
ஐப்பசி மாதப் பிறப்புக்காக, நடை திறக்கப்பட்டு, தொடர்ந்த 5 நாட்களும் சில பெண்களை சபரிமலைக்கு ஏற்றி அனுப்பி, எப்படியாவது சந்நிதி முன் நிறுத்திவிட வேண்டும் என்று கேரள அரசு எடுத்த பகீரத முயற்சி, ஐயப்ப பக்தர்களால் தடுத்து நிறுத்தப் பட்டது.
இந்நிலையில் சபரிமலை விவகார சீராய்வு மனுக்களை விசாரிப்பது குறித்த அறிவிப்பை, உச்ச நீதிமன்றம் இன்று வெளியிட்டது.
இந்த மறு சீராய்வு மனுக்கள் எல்லாம் நவம்பர் மாதம் 13 ஆம் தேதி விசாரிக்கப் படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், வரும் நவம்பர் 17ஆம் தேதி, மீண்டும் மண்டல பூஜைக்காகவும், மகரஜோதிக்காகவும் நடை திறக்கப் படுகிறது.
நடை திறக்கப்படும் நாளுக்கு நான்கு நாட்கள் முன் சீராய்வு மனுக்கள் விசாரிக்கப்படும் என்று அறிவித்துள்ளதால், ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.