
அயோத்தி தொடர்பான வழக்கு விசாரணையை ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்! சர்ச்சைக்குரிய கட்டடம் இருந்த 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக விசாரணை நடைபெறும்!
அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டடம் இடிக்கப்பட்ட இடத்தில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கின் விசாரணைக்கான நாளைத் தீர்மானிப்பதை உச்ச நீதிமன்றம் ஜனவரி மாதத்துக்கு ஒத்தி வைத்துள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இரண்டே முக்கால் ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கு நூறாண்டுக்கு மேல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நிலத்தை மூன்று சம பங்குகளாகப் பிரித்தது நீதிமன்றம். ராம் லல்லாவுக்கு ஒரு பங்கு, சன்னி வக்பு வாரியத்துக்கு ஒரு பங்கு, நிர்மோகி அகாராவுக்கு ஒரு பங்கு எனப் பிரித்து, 2010ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் சஞ்சய் கிசன் கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் எப்போது விசாரணை மேற்கொள்வது என்பது குறித்து, ஜனவரி மாத முதல் வாரம் முடிவு செய்யப்படும் எனக் கூறி நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.



