
நடிகர் விஜய் நடித்த சர்கார் படத்துக்கு ரெட் கார்டு தடை விதிக்கக் கோரி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலிடம் மனு அளித்துள்ளார் குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகர்.
அவர் அளித்த மனுவில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது…
விவசாயிகளின் பிரச்னை மற்றும் தற்கொலையை மையமாக வைத்து, நான் இயக்கிய தாகபூமி என்ற குறும்படத்தின் கதையைத் திருடி, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கத்தி படத்தை இயக்கியிருந்தார்.
இது குறித்த வழக்கு தஞ்சை குற்றவியல் நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால், எனது ஒட்டுமொத்த வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே எனக்கு நியாயம் கிடைக்கும் வரை, ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது இயக்கியுள்ள சர்கார் படத்திற்கு ரெட் கார்டு தடை விதிக்க வேண்டும்.,
இவ்வாறு, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலிடம் குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகர் மனு அளித்துள்ளார்.
ஏற்கெனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இரு படங்களும் கதைத் திருட்டு சர்ச்சையில் சிக்கியிருப்பதால், சர்கார்… சறுக்கிக் கொண்டிருக்கிறார்!



