பிரான்ஸ், ஜெர்மனி, கனடா பயணம்: இன்று செல்கிறார் மோடி

புது தில்லி: பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளில் ஒன்பது நாட்கள் அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இதற்காக இன்று காலை தில்லியிலிருந்து புறப்படுகிறார். அவரின் இந்தப் பயணத்தின் போது, முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பது, வர்த்தகம், அணுசக்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிகிறது. பிரான்ஸ், ஜெர்மனி, கனடாவு நாடுகளுக்கு பிரதமராகப் பதவியேற்ற பின், மோடி பயணம் மேற்கொள்வது, இதுவே முதல் முறை. மூன்று நாடுகள் பயணத்தில், முதல் கட்டமாக, இன்று பிரான்ஸ் புறப்பட்டுச் செல்லும் பிரதமர், அங்கு நான்கு நாட்கள் தங்கியிருப்பார். அப்போது, பிரான்ஸ் அதிபர் பிரான்ஸ்வா ஹாலண்டே, முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்துப் பேசுகிறார். இந்தச் சந்திப்புகளின் போது, உள்கட்டமைப்பு வசதி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்து விவாதிக்க உள்ளார். பிரான்ஸுக்குப் பிறகு, திங்களன்று ஜெர்மனி செல்கிறார். ஜெர்மனியின் பெர்லின் நகர் சென்றடையும் அவர், வரும் செவ்வாயன்று, அந்நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்கெலை சந்தித்து, சுத்தமான எரிசக்தி, உள்கட்டமைப்பு மேம்பாடு, ‘ஸ்மார்ட்’ நகரங்கள் உட்பட, பல விஷயங்கள் குறித்து பேச்சு நடத்துகிறார். அத்துடன், ஜெர்மன் தொழிலதிபர்கள் பங்கேற்கும் பிரமாண்டமான மாநாட்டிலும் பேசுகிறார். மேலும், இந்தியாவும், ஜெர்மனும் இணைந்து நடத்தும், கண்காட்சியையும் பார்வையிடுகிறார். இந்தக் கண்காட்சியில், 350க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் பங்கேற்கின்றன. முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசும் போது, இந்தியாவின், ‘மேக் இன் இந்தியா’ திட்டம் குறித்து விவரித்து, முதலீடு செய்ய வரும்படி மோடி அழைப்பு விடுக்கவுள்ளார். இந்திய – ஜெர்மன் வர்த்தக மாநாட்டில் பேசும் மோடி, 800 வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடுகிறார். அதன் பின் கனடா செல்கிறார். மோடியுடன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பீயுஷ் கோயல், ரவிசங்கர் பிரசாத், ராஜிவ் பிரதாப் ரூடி, வெங்கையா நாயுடு, மேகாலயா, உ.பி., மற்றும் மகாராஷ்டிரா மாநில முதல்வர்களும், தொழிலதிபர்கள், 110 பேரும் செல்ல உள்ளனர். இந்தத் தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து தனது டிவிட்டரில் செய்தி பகிர்ந்துள்ளார் மோடி.