குடியரசு தினத்தில் காவலர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார் பிரதமர் மோடி

புது தில்லி:

வரும் 2016 ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாடு முழுவதிலும் உள்ள 18 லட்சம் போலீஸாருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தது:

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, வரும் குடியரசு தினத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து போலீஸாருக்கும் எஸ் எம் எஸ் மூலம் வாழ்த்து தெரிவிக்க, விருப்பம் தெரிவித்தார். அதனை முன்னிட்டு, டிஜிபி முதல் காவலர் வரையிலான அனைவரின் செல்பேசி எண்களையும் தனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
நாட்டின் பிரதமர் ஒருவர், நாட்டில் உள்ள அனைத்து போலீஸாரையும் தொடர்பு கொள்வது இதுவே முதல்முறை. மேலும், காவல்துறையில் பணியாற்றுபவர்கள் தினமும் யோகாசனப் பயிற்சி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்திய பிரதமர், தேவை ஏற்பட்டால் காவல் நிலையங்களில் யோகா பயிற்சியாளர்களை அமர்த்துமாறு யோசனை தெரிவித்தார்.
புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு போலீஸார் தயக்கம் காட்டக் கூடாது என்று கூறிய மோடி, காவல்துறை பற்றிய தவறான எண்ணம் விலகும் விதத்தில், பத்திரிகையாளர்களுடன் போலீஸார் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.