சபரிமலை பாதுகாப்பு தொடர்பாக பாஜக., ரத யாத்திரை ஒன்றுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இது குறித்து இன்று தனது டிவிட்டரில் பதிவு செய்துள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.
அவரது டிவிட்டர் பதிவில், 8.11.18 கேரள மாநிலத்தலைவர் திரு. ஸ்ரீதரன் பிள்ளைஅவர்கள் மற்றும் பிடிஜேஎஸ் தலைவர் திரு.துஷார் வெள்ளப்பள்ளி அவர்கள் தலைமையில் “சபரிமலை சம்ரக்ஷணா ரத யாத்திரை” காசர்கோடு மாவட்டம் மதூரில் துவங்கி பத்தனம்திட்டா வரை 6 நாட்கள் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.சாமியே சரணம் ஐயப்பா… என்று கூறியுள்ளார்.
8.11.18 கேரள மாநிலத்தலைவர் திரு. ஸ்ரீதரன் பிள்ளைஅவர்கள் மற்றும் பிடிஜேஎஸ் தலைவர் திரு.துஷார் வெள்ளப்பள்ளி அவர்கள் தலைமையில் “சபரிமலை சம்ரக்ஷணா ரத யாத்திரை” காசர்கோடு மாவட்டம் மதூரில் துவங்கி பத்தனம்திட்டா வரை 6 நாட்கள் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.சாமியே சரணம் ஐயப்பா. pic.twitter.com/QcQWNjRBIX
— H Raja (@HRajaBJP) November 1, 2018
சபரிமலை விவகாரத்தில் சபரிமலை பாதுகாப்பு தொடர்பாக இந்து அமைப்புகள் 6 நாள் ரத யாத்திரைக்கு ஏற்பாடு செய்துள்ளன. நவம்பர் 8ம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆறு நாள் இந்த யாத்திரை நடைபெற உள்ளது. உச்ச நீதிமன்றம் நவம்பர் 13ஆம் தேதி சபரிமலை குறித்த மறுசீராய்வு மனுவை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்த நவ.13ம் தேதி, இந்த ரதயாத்திரை முடிவுபெறும்.

பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை இது குறித்துக் கூறும்போது இந்த ரத யாத்திரையை தாம் தலைமை தாங்கி நடத்திச் செல்வதாகவும் காசர்கோடு மாவட்டத்தில் இது தொடங்கும் என்றும், பாஜகவின் கூட்டணி அமைப்பான பாரத தர்ம ஜன சேனா இந்த ரத யாத்திரையில் கலந்து கொள்கிறது என்றும் கூறினார்.
மேலும், ஈழவ சமுதாயத்தின் தலைவரான வெள்ளப்பள்ளி நடேசனின் மகனும் பாரத தர்ம சேனா ஜன சேனாவின் தலைவருமான துஷார் வெள்ளப்பள்ளி, இந்த யாத்திரையில் பங்கு கொள்கிறார். காசர்கோடு மாவட்டத்தில் உள்ள மதூர் கோவிலில் இருந்து இந்த ரதயாத்திரை நவம்பர் 8ம் தேதி தொடங்குகிறது.
சபரிமலை அடிவாரமான எரிமேலியில் 6 நாட்கள் கடந்து இந்த ரத யாத்திரை நிறைவு பெறும். பாஜக உயர்மட்ட தலைவர்கள் தேசிய தலைவர்கள் இந்த ரத யாத்திரை நிறைவு நாளில் கலந்து கொள்வார்கள். ஹிந்து மக்களிடம் மட்டுமல்லாமல் இந்து அமைப்புகளிடம் மட்டுமல்லாமல் கிறிஸ்துவர்கள் முஸ்லிம்கள் ஆகியவர்களிடம் ஆதரவு கோரவுள்ளோம்.
இந்த ரதயாத்திரை பாதையில் 52 கிறிஸ்துவ அமைப்புகள் பிஷப்புகளின் வீடுகள் 12 இஸ்லாமிய மையங்கள் ஆகியவை உள்ளன. அவற்றுக்குச் சென்று அவர்களை சந்தித்து, அனைத்து மத அமைப்புகளின் ஆதரவையும் கோருவோம். கேரளத்தை ஆளும் நாத்திக அரசுக்கு எதிராக ஆத்திகவாதிகளான அனைத்து மத மக்களையும் ஒருங்கிணைத்து இந்த ரதயாத்திரை மேற்கொள்ளப்படும்
ஹிந்து சாதுக்களையும் கேரளத்திலுள்ள சாதுக்கள் அமைப்புகளையும் இந்த ரத யாத்திரையில் பங்குகொள்ள அழைப்பு விடுத்துள்ளோம். சபரிமலை கோவிலை அழிப்பதற்காக கம்யூனிஸ்ட்களான ஏகே கோபாலன், ஈகே நாயனார் ஆகியோர் அதிகம் முயன்றனர். அவர்களின் பங்கை இந்த ரத யாத்திரையின் போது தோலுரித்துக் காட்டுவோம் என்று கூறியுள்ளார் ஸ்ரீதரன் பிள்ளை.
இந்த ரத யாத்திரை அறிவிப்புக்கு கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ள கேரள முதல்வர் பிணரயி விஜயன், இது எல்.கே. அத்வானி நடத்தியது போன்ற பிரிவினைவாதத்தை மக்களிடம் ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
கேரள கம்யூனிஸ்ட்களின் கொலை வெறி வன்முறைகளை மக்கள் ஏற்கெனவே கண்டுள்ளதால், இரு தரப்பு அறிவிப்புகளைக் கேட்டு, கேரளத்தில் வன்முறைகள் வெடிகக் கூடும் என்ற அச்ச உணர்வு இப்போது மக்களிடையே எழுந்துள்ளது.
மேலும், நேற்று கேரள முதல்வர் தென் மாநிலங்களின் அறநிலையத்துறை அமைச்சர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தும் எந்த முதல்வரும் தங்களது அமைச்சர்களை அனுப்பவில்லை. சபரிமலை பிரச்சினை குறித்து தனது இந்து விரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவு தேடும் முயற்சிக்கு விஜயனுக்கு கொடுக்கப்பட்ட முதல் அடி என்று இந்து இயக்கத்தினர் கூறுகின்றனர். சபரிமலை விவகாரத்தில், கேரள கம்யூனிச அரசும், பிணரயி விஜயனும் தனித்துவிடப்பட்டுள்ளாக விமர்சனங்களை அவர்கள் முன்வைக்கின்றனர்.