அநாகரிகமே இந்திய அரசியலின் புதிய வடிவமா?: அருண் ஜேட்லி

புது தில்லி:

அநாகரிகமே இந்திய அரசியலின் புதிய வடிவமா என்று கேள்வி எழுப்பியுள்ள நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, அப்படி என்றால் அதன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்ற செயல்பாடுகள் குறித்து சமூக வலைதளத்தில் அருண் ஜேட்லி ஒரு சிறிய கட்டுரை எழுதி வெளியிட்டுள்ளார். அதில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சியினரின் செயல்பாடுகளைக் கடுமையாக கண்டித்துள்ளார். கடந்த இரண்டு கூட்டத் தொடரிலும் நாடாளுமன்றத்தை நடத்தவிடக் கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருந்தது என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “சில மாதங்களுக்கு முன்பாக பா.ஜ.க., தலைவர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்கள் கட்சியே பாராட்டக் கூடிய வகையில் இல்லை. அவ்வாறு தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பவர்களுக்கு கட்சியின் தலைவர் ஆலோசனை வழங்கினார். மேலும் கருத்துக்களை முறைப்படுத்தி வெளிப்படுத்த வேண்டும். தில்லி முதல்வர் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தப்பட்ட போது பிரதமர் குறித்து அரவிந்த் கேஜ்ரிவால் கூறியிருந்த கருத்தினை சுட்டிக் காட்டிய ஜேட்லி, முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கேலும், “இந்திய அரசில் உள்ள ஒருவர் கேஜ்ரிவாலை போன்று கருத்து தெரிவித்தால், அது தேசிய அளவிலான சீர்கேட்டுக்கு அடையாளமாக மாறிவிடும்” என்றும் கூறியுள்ளார்.