
ஐபிஎல் 2025 – எலிமினேட்டர் ஆட்டம் 30.05.2025 – சண்டிகர் – மும்பை vs குஜராத்
ரோஹித் ஷர்மாவின் கலக்கல் ஆட்டம்
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
மும்பை இந்தியன்ஸ் அணி (228/5, ரோஹித் ஷர்மா 81, ஜானி பெயிர்ஸ்டோ 47, சூர்யகுமார் யாதவ் 33, திலக் வர்மா 25, ஹார்திக் பாண்ட்யா 22, நமன் திர் 9, பிரசித் கிருஷ்ணா 2/53, சாய் கிஷோர் 2/42, சிராஜ் 1/37) குஜராத் டைடன்ஸ் அணியை (208/6, சாய் சுதர்ஷன் 80, வாஷிங்க்டன் சுந்தர் 48, ரூதர்ஃபோர்ட் 24, குசல் மெண்டிஸ் 20, ராகுல் திவாத்தியா ஷாருக் கான் 13, போல்ட் 2/56, பும்ரா, கிளீசன், சாண்ட்னர், அஷ்வினி குமார் தலா ஒரு விக்கட்) 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற மும்பை இந்தியன் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜானி பெயர்ஸ்டோ (22 பந்துகளில் 47 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் ரோஹித் ஷர்மா (50 பந்துகளில் 81 ரன், 9 ஃபோர், 4 சிக்சர்) ஆகியொர் சிறப்பான தொடக்கம் தந்தனர். முதல் 6 பவர்பிளே ஓவர்களில் அந்த அணி விக்கட் இழப்பின்றி 79 ரன் எடுத்தது. பெயர்ஸ்டோ எட்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.
அவருக்குப் பின் வந்த சூர்யகுமார் யாதவ் (20 பந்துகளில் 33 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்), திலக் வர்மா (11 பந்துகளில் 25 ரன், 3 சிக்சர்), ஹார்திக பாண்ட்யா (9 பந்துகளில் 22 ரன், 3 சிக்சர்), நமன் திர் (6 பந்துகளில் 9 ரன், 1 சிக்சர்) ஆகியோர் மிகச் சிறப்பாக ஆடினர். இதனால் மும்பை அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 228 ரன் எடுத்தது.
229 ரன் என்ற கடினமான இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் (1 ரன்) முதல் ஓவர் நாலாவது பந்தில் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் (10 பந்துகளில் 20 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் வாஷிங்க்டன் சுந்தர் (24பந்துகளில் 48 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) இருவரும் மற்றொரு தொடக்க வீரரான சாய் சுதர்ஷன் (49 பந்துகளில் 80 ரன், 10 ஃபோர், 1 சிக்சர்) உடன் இணைந்து ஆடி 56 பந்துகளில் அணிக்கு 100 ரன்கள் சேர்த்தனர்.
இருப்பினும் இவர்களுக்குப் பின்னர் வந்த ரூதர்ஃபோர்ட் (15 பந்துகளில் 24 ரன், 4 ஃபோர்), ராகுல் திவாத்தியா (11 பந்துகளில் 16 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்), ஷாருக் கான் (7 பந்துகளில் 13 ரன்) ரஷீத் கான் (பூஜ்யம் ரன்) ஆகியோரால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 208 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
மும்பை அணியின் ரோஹித் ஷர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி பஞ்சாப் அணியுடன் மற்றொரு தகுதி ஆட்டத்தில் ஆடும்.





