
ஜனநாயகத்திற்கு எதிரான, மக்கள் விரோத நக்சல் பயங்கரவாத ஒழிப்பிற்கு
எதிராக கம்யூனிஸ்டுகள் ஆர்ப்பாட்டம் நடத்தியது, தமிழகத்திற்கு ஆபத்து… என்று, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
1967-ல் ஆரம்பிக்கப்பட்ட நக்சல்பாரி அமைப்புகள் நமது நாட்டின் வளர்ச்சியை முடக்கி வந்தது. ஆயுத புரட்சி எனும் வன்முறை மூலமாக இளைஞர்களை மூளைச்சலவை செய்து வன்முறையில் ஈடுபட வைத்தது.
கடந்த காலங்களில் நக்சல்கள் முழுவதுமாக அழிக்கப்படுவார்களா எனும் கேள்வி மக்களிடையே எழுந்தது. மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் 2026 மார்ச் 31-க்குள் நக்சல்கள் வேரோடும் வேரடி மண்ணோடும் களை எடுக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் அறிவித்தார்.
அதன்படி செயல்பட்டு நக்சல் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தர் பகுதியில் மே மாதம் 21 ஆம் தேதி, நமது பாதுகாப்பு படையினர் நக்சல் இயக்கத்தின் முதுகெலும்பாக செயல்பட்டு வந்த நம்பாலா கேசவராவ் என்கின்ற பரசவராசு உள்ளிட்ட 27 பயங்கரவாதிகளை
சுட்டுக் கொன்றனர்.
நக்சல் தாக்குதல்களால் கடந்த 25 ஆண்டுகளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதைப்பற்றி கவலைப்படாத கம்யூனிஸ்டுகள் நக்சல்களுக்கு ஆதரவாக ‘போலி என்கவுண்டர்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி மக்களை குழப்ப தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடுகின்றனர். நக்சல் பயங்கரவாத அமைப்புகளால் அந்தந்த மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் வராமல் தடுக்கின்றனர்.
நக்சல்கள் ஆக்கிரமித்த பகுதிகளில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, பள்ளிக்கூடம் போன்ற அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்த விடாமல் தடுத்து, பொதுமக்களை மிகுந்த கஷ்டத்தில் தள்ளுகின்றனர். உள் கட்டமைப்பு இல்லாததால் வளர்ச்சி ஏற்படாமல் அப்பகுதி மக்கள் ஏழ்மையில் வாடுகின்றனர். நக்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் கல்வி கற்போர் எண்ணிக்கையும் குறைவாக இருந்து வந்தது. வளர்ச்சித் திட்டங்களை முடக்கி மக்களை ஏழ்மையாகவே வைத்திருக்கும் நக்சல் அமைப்புகளை முற்றிலும் ஒழித்திட மத்திய அரசு முனைந்து செயல்பட்டு வருகிறது.
நக்சல் தலைவன் பசவராசு சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு அவன் பிறந்த கிராமத்தில் தற்போது மின்சார வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதே கிராமத்தில் தார் சாலை போடும்போது கன்னிவெடி வைத்து நக்சல்கள் அதை தகர்த்தனர். ஆனால் தற்போது நிலைமை சீராகி வருகிறது. இந்த ஆண்டு இதுவரை 25 நக்சல்கள் சரணடைந்துள்ளனர்.
அதே வேளையில் மொபைல் இணைப்பு மத்திய அரசு உதவி திட்டம், சிறப்பு உட்கட்டமைப்பு திட்டம், ஊரக வேலை வாய்ப்பு திட்டம் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வேலைகளையும் மத்திய மாநில அரசுகள் இணைந்து விரைவாக செயல்படுத்தி வருகின்றன.
106 மாவட்டங்கள் நக்சல்களின் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கருதப்பட்ட நிலையில் தற்போது அது 16 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையால் விரைவில் நக்சல்கள் இல்லாத தேசமாக பாரதம் உருவெடுக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
தமிழகத்திலும் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது காவல்துறை அதிகாரி வால்டர் தேவாரம் தலைமையில் ஒட்டுமொத்தமாக நக்சல் பயங்கரவாதத்தை ஒழித்தார். தெலுங்கானா பகுதியில் பெருகி வந்த நக்சல் இயக்கம் ஒழிக்கப்பட்டது. இப்போது மீண்டும் கேரள மாநில எல்லைப் பகுதியான தேனி மலைப் பகுதிகளில் நக்சல் பயிற்சிகள் நடப்பதாக உளவு துறை எச்சரிக்கை செய்துள்ளது.
தமிழகத்தில் கம்யூனிஸ்ட் அமைப்புகள் நக்சல்களை ஆதரித்தும் ‘போலி என்கவுண்டர்’ என்ற பிம்பத்தை உருவாக்கி மக்களை குழப்பவும் ஜூன் இரண்டாம் தேதி ராஜரத்தினம் திடலில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரியுள்ளனர்.
நக்சல் இயக்கம் என்பது கம்யூனிஸ்ட்களின் துணை அமைப்புதான் என்பதை இதன்மூலம் தெள்ளத் தெளிவாக அறிய முடியும். தேசத்திற்கு எதிரான வன்முறையாளர்களை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட்கள் குறித்து மாநில அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் மக்கள் கலை இலக்கிய கழகம், மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகள் நகர்புற நக்சல்ளாக மாறி தமிழகத்தில் குழப்பத்தை விளைவித்து வருகின்றன. இதனுடன் விடுதலை சிறுத்தைகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கைகோர்த்துள்ளது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் எந்த தொழிற்சாலைகள் வந்தாலும் அதை ஏதோ ஒரு காரணம் காட்டி முடக்கி வருகிறது கம்யூனிஸ்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நக்சல் வன்முறை இல்லாத நாடாக பாரதம் உருவாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் இந்த வேளையில், கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் நக்சல் ஆதரவு நிலையை ஏற்படுத்தும். தமிழகத்தில் நக்சலைட்கள் பரவ தமிழக அரசே துணைபோகும் ஆபத்தையும் சுட்டிக்காட்டுகிறோம்.
நக்சல்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை மத்திய, மாநில உளவுத்துறை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.





