ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மக்களையும் தொண்டர்களையும் ஏமாற்றும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்று கூறினார் தமிழிசை சௌந்தர்ராஜன்.
தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், திருப்பதிக்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மக்களையும் தன் கட்சி தொண்டர்களையும் ஏமாற்றும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்று கூறினார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி மீது இருக்கும் அச்சத்தின் காரணமாகவே எதிர்க் கட்சியினர் ஒன்று சேர்ந்து கூட்டம் அமைக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேசிய தலைவர் அமித்ஷா முடிவு செய்வார்.
தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற இடைத் தேர்தல் குறித்து வருகின்ற 15ஆம் தேதி கட்சியின் மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி தேர்தலில் போட்டியிடுவது பற்றி முடிவு செய்வோம்… என்று கூறினார்.




