இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இந்தியா வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கிலும் அடுத்து நடந்த ஒருநாள் போட்டித் தொடரில் 1-3 என்ற கணக்கிலும் தோற்றது. இதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. கொல்கத்தா மற்றும் லக்னோவில் நடந்த முதல் 2 போட்டியிலும் வெற்றியை வசப்படுத்திய இந்தியா தொடரையும் கைப்பற்றியது.
இந்த நிலையில், சம்பிரதாயமான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்திய அணியி உமேஷ், குல்தீப், பூம்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால், தொடரில் இதுவரை விளையாடாத வீரர்கள் களமிறங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, உள்ளூர் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்படலாம். ஷ்ரேயாஸ் அய்யருக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். ரோகித் தலைமையிலான இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியுடன் 3-0 என ஒயிட்வாஷ் செய்ய வரிந்துகட்டும் நிலையில், ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்பும் உத்வேகத்துடன் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் உள்ளனர்.




