
சபரிமலை நடை திறந்து ஆறு நாட்கள் ஆகும் நிலையில் பக்தர்கள் வருகை வெகுவாக சரிந்துள்ளது. இதற்குக் காரணம் போலீஸாரின் கெடுபிடிகள் மற்றும் சபரிமலையில் போலீஸாரே நிறைந்திருப்பதுதான் என்கிறார்கள் சபரிமலை வந்து செல்லும் பக்தர்கள்!
இந்த அளவுக்கு சபரிமலைக்கு பக்தர்கள் தொடக்க நாட்களில் வராமல் இருப்பது சரித்திரத்தில் இல்லாத சரிவு என்கிறார்கள் பக்தர்கள். போலீஸார் விதித்துள்ள 144 தடை உத்தரவு, பக்தர்கள் மீது காட்டும் காட்டுமிராண்டித்தனமான கெடுபிடிகள், பக்தர்களை ஏதோ குற்றவாளிகளைப் போல் பார்த்து நடவடிக்கை மேற்கொள்வது இவை போன்றவைதான் இந்த சரிவுக்கு காரணமாகக் கூறப் படுகிறது.

ஜனநாயகம் சோஷலிஸம் என்றெல்லாம் பேசும் கேரள கம்யூனிஸ அரசு, ஊடகங்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் சபரிமலை பகுதியில் கடும் கட்டுப் பாடுகளை விதித்துள்ளதாக செய்திகளில் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கேரள பிணரயி விஜயன் அரசு பக்தர்களுக்கு ஐந்து கட்டளைகளை விதித்திருப்பதாகக் கூறுகிறார்கள். கேரள போலீஸார் இதனை பக்தர்களிடம் பம்பையிலேயே தெரிவித்து விடுகிறார்கள். இதனை மீறினால் சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப் படும் என்றும், கைது செய்யப் படுவர் என்றும் எச்சரிக்கை விடுத்து அனுப்புகிறார்கள்.

அந்தக் கட்டளைகள்…
1. சபரிமலைக்கு வரும் பக்தர்கள், குழுவாக எங்கேயும் அமரக் கூடாது; குழுவாக எங்கும் கூடி நிற்கக் கூடாது!
2. சரண கோஷத்தை சொல்லக் கூடாது
3. ஊடகங்களில் பேட்டி என்று கேட்டால், அவர்களிடம் எதுவும் பேசக் கூடாது.
4. ஆறு மணி நேரத்துக்கு மேல், பக்தர்கள் எவரும் சபரிமலை சந்நிதானத்தில் இருக்கக் கூடாது.
5. ஆறு மணி நேரத்தில் சபரி சந்நிதானத்தில் இருந்து கட்டாயம் வெளியேறி, போலீஸாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
– மேற்கண்ட எச்சரிக்கைகளில் ஏதேனும் நீங்கள் தவறியிருந்தால் உங்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப் படும்.

சபரிமலை என்றாலே, குழுவாக பயணம் செய்வதும், பக்தர்கள் கூடி சரண கோஷம் சொல்லி, ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து அழைத்துச் செல்வதுதான். மலையேற சிரமப் படும் போது, ஏத்தி விடய்யா தூக்கி விடய்யா என்று பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் கைத்தாங்கலாக உதவி பாடி அனைவரிலும் ஐயப்பனைக் காண்பது மரபு, ஆனால், போலீஸாரின் இத்தகைய கெடுபிடிகளும் பிணராயி விஜயனின் ஐந்து கட்டளைகளும் சபரிமலையின் கண்ணியத்தையும், பாரம்பரியத்தையும் மரபையும் பக்தர்களின் உரிமையையும் உணர்வையும் மீறுவதாகவும் நசுக்குவதாகவும் உள்ளது என்றே அனைவரும் கூறுகின்றனர்.
குறிப்பாக, உச்ச நீதிமன்றத்தின் அனுமதி என்ற ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு, கம்யூனிஸ காட்டுமிராண்டித் தனங்களை அரங்கேற்றுகிறது பிணராயி விஜயன் அரசு என்று குமுறுகின்றனர் பக்தர்கள்.

