கஜா பாதிப்பில்… தமிழக அரசுக்கு என்ன உதவி செய்தீங்க? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

madurai high court - 2026

புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு, சீரமைப்பு, மறுவாழ்வுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் வழக்கறிஞர் திருமுருகன் என்பார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தேசிய பேரிடர் பாதிப்புப் பகுதியாக அறிவிக்க வேண்டும் எனவும், உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு 25 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாயும் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

கடலோர மாவட்டங்களில் மறுசீரமைப்பு நிவாரண முகாம்களை அமைக்க வேண்டும். மீட்புப்பணியில் முப்படையினரையும், துணை ராணுவத்தினரையும் ஈடுபடுத்தக் கோரியும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் வழங்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு. புயலால் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க மாநில அரசு மத்திய அரசிடம் என்னென்ன உதவிகள் கோரியது? அதனடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களிலும் அடிப்படை வசதிகளைப் போர்க்கால அடிப்படையில் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 4 மாவட்ட ஆட்சியர்களும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை வியாழக்கிழமைக்குத் தள்ளிவைத்தனர்.

1 thought on “கஜா பாதிப்பில்… தமிழக அரசுக்கு என்ன உதவி செய்தீங்க? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!”

  1. உண்மையில் வருத்தமாக உள்ளது.புயலுக்குப்பின் அமைதி எப்போது திரும்பும்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.