புது தில்லி: 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர்குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் குற்றவாளி யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது . மும்பையில் கடந்த 1993-இல் நடைபெற்ற தொடர்குண்டு வெடிப்பு சம்பவத்தில் 257 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். 700க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம் கூட்டாளியான யாகூப் மேமன் உள்பட 11 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கடந்த 2013 மார்ச் 21ஆம் தேதி உறுதி செய்தது. மற்ற 10 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டது. யாகூப் மேமன் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து மும்பை ‘தடா’ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. மும்பை தாக்குதலுக்கு நிதி ஏற்பாடு செய்தல், கிரிமினல் சதி செய்தல் போன்ற குற்றச்சாட்டுகள் யாகூப் மேமன் மீது பதிவு செய்யப்பட்டன. இதனையடுத்து யாகூப் மேமன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இருப்பினும் 2013ல் யாகூப் மேமனின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் யாகூப் மேமன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவில், “குடியரசுத் தலைவரால் கருணை மனு தள்ளுபடியான நிலையில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணைகள் நீதிபதிகளின் அறைகளில் ரகசியமாக நடத்தப்படுகிறது. இந்த நடைமுறையை கைவிட்டு பகிரங்க விசாரணை நடத்த உத்தரவிடப்பட வேண்டும். ஏறக்குறைய ஆயுள்தண்டனைக்கு நிகராக 20 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் எனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யவேண்டும். ஒரே குற்றத்துக்காக ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் மரண தண்டனையும் என இரு தண்டனைகளை அளிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை என்பதால் இதை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்’ என்று யாகூப் மேமன் தரப்பில் கூறப்பட்டது. நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், சி.நாகப்பன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இந்த மனு திங்கள்கிழமை விசாரிக்கப்பட்டது. அப்போது யாகூப் மேமன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் உபமன்யு ஹசாரிகா 2000த்தில் தில்லி செங்கோட்டை மீதான தாக்குதல் வழக்கில் குற்றவாளியான முகமதுஆரிப் தொடர்பான விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியதுபோல இந்த வழக்கின் விசாரணையும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று கோரினார். இதனை ஏற்ற நீதிபதிகள், யாகூப் மேமனின் இந்த மனுவையும் தில்லி செங்கோட்டை தாக்குதல் வழக்குடன் சேர்த்து விசாரிக்கவும், யாகூப் மேமன் மரண தண்டனையை நிறைவேற்ற இடைக் காலத் தடையும் விதித்தனர். இதையடுத்து, மரண தண்டனையை மறு சீராய்வு செய்யக் கோரும் யாகூப் மேமன் மனுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மகாராஷ்டிர சிறப்புப் புலனாய்வுப் பிரிவு மற்றும் சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதிடப் படடது. இந்நிலையில் யாகூப் மேமன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. நீதிபதி அனில் தவே தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், யாகூப் மேமனின் மறு ஆய்வு மனுவை வியாழக்கிழமை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அது தன் உத்தரவில், யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்வதற்கான எந்தத் தகுதியும் இந்த வழக்கில் இல்லை என்று தெரிவித்தது. இதைஅடுத்து உச்ச நீதிமன்றம் யாகூப் மேமனின் மரண தண்டனையை உறுதி செய்தது.
யாகூப் மேமன் மரண தண்டனை: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari