திருப்பதி: ஏழைகளுக்கு உணவு வழங்குவதற்காக சமையல் கட்டில் இறங்கிய ரோஜா.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரி சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரோஜா. ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரான ரோஜா ஆந்திராவில் அதிரடி அரசியலுக்கு பெயர் பெற்றவர்.
ஆந்திர மாநிலம் முழுவதும் தமிழ்நாட்டில் செயல்படும் அம்மா உணவகங்களை போன்று அண்ணா கேண்டீன் என்ற பெயரில் மலிவு விலை உணவகங்களை ஆந்திர அரசு துவக்கி உள்ளது.
அவற்றில் ஐந்து ரூபாய் விலையில் ஏழைகளுக்கு மதிய உணவு மற்றும் சிற்றுண்டிகள் ஆகியவை வழங்கப்படுகின்றன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு எதிராக அரசியல் செய்வது பெரும் விருப்பம் கொண்டுள்ள ரோஜா தன்னுடைய பிறந்த நாளான கடந்த மாதம் 17ம் தேதி அன்று ஒய்எஸ்ஆர் கேன்டீன் என்ற பெயரில் நடமாடும் மலிவு விலை உணவகத்தை நகரியில் துவக்கினார்.
மினி லாரி ஒன்றில் செயல்படும் ஒய்எஸ்ஆர் கேன்டீன் உணவகத்தில் நான்கு ரூபாய் விலையில் சாப்பாடு வழங்கப்படுகிறது. ரோஜா தன்னுடைய தொகுதியில் துவக்கியுள்ள ஒய்எஸ்ஆர் கேண்டின் மலிவு விலை உணவகத்திற்கு பொது மக்களிடையே சிறப்பான வரவேற்பு உள்ளது. தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரோஜாவின் ஒய்எஸ்ஆர் கேண்டினில் தலா 4 ரூபாய் மலிவு விலையில் உணவு சாப்பிடுகின்றனர்.
இந்நிலையில் ஒய்எஸ்ஆர் கேண்டீன் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் மலிவுவிலை உணவை ரோஜா அடுப்படியில் இறங்கி தயார் செய்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.