புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏக்களின் நியமனம் செல்லும்: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

புதுச்சேரி அரசின் பரிந்துரையின்றி பாஜக.,வைச் சேர்ந்த மூன்று பேரை எம்.எல்.ஏக்களாக நியமித்தது மத்திய அரசு. இந்த நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது,  என்று சபாநாயகர் கொந்தளித்தார். தற்போது மூன்று பேரை எம்.எல்.ஏக்களாக நியமித்தது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

புதுச்சேரி சட்டசபைக்கு மாநில அரசின் பரிந்துரை இன்றி 3 நியமன எம்எல்ஏ.,க்களை மத்திய அரசு நியமனமித்தது. பாஜக.,வைச் சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய மூவரும் இவ்வாறு நியமிக்கப்பட்டனர்.

ஆனால் புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம், நிமயன எம்.எல்.ஏ., க்களை அங்கீகரிக்க மறுத்தார். அவர்களுக்கு சம்பளம், சலுகைகளும் வழங்கப்படவில்லை. நியமனத்தை ரத்து செய்யக் கோரி எம்.எல்.ஏ., லட்சுமிநாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் மத்திய அரசின் நியமனம் செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் லட்சுமி நாராயணன்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்ததுடன், புதுச்சேரி அரசு இதில் தலையிட தேவையில்லை என்றும் கூறியது.