பேனா திருட்டு?: ஆசிரியர் அடித்து 3ம் வகுப்பு மாணவன் மரணம்

student-beaten-up-head-masterபாராபங்கி: உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கி அருகே தலைமை ஆசிரியர் பேனா திருடினான் என்று குற்றம் சாட்டி 3ம் வகுப்பு மாணவனை அடித்ததில் அந்த மாணவன் உயிரிழந்தான். உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டம் ராகிலாமவ் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியான சௌத்ரி த்வாரிகா ப்ரசாத் அகதமி பள்ளியில், தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் லலித் குமார் வெர்மா. இந்தப் பள்ளியின் 3-ம் வகுப்பில் 7 வயது சிறுவன் ஒருவன் மற்றும் சிவா ராவத் (10) என்ற 2 மாணவர்கள் புதிதாகச் சேர்ந்தனர். இந்நிலையில் அந்த வகுப்பில் உள்ள சக மாணவர்கள் தங்களது பேனா காணாமல் போனதாக தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். தொலைந்து போன பொருட்களைத் தேடிய போது அவை புதிதாகச் சேர்ந்த 2 மாணவர்களிடம் இருப்பது தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த தலைமை ஆசிரியர் வெர்மா 2 மாணவர்களையும் கண்மூடித் தனமாக அடித்துள்ளார். மாணவனின் வயிற்றில் கடுமையாகத் தாக்கியுள்ளார். அழுது கொண்டே வீட்டுக்குச் சென்ற சிவா ராவத் நடந்ததை பெற்றோரிடம் கூறி, தனக்கு வயிறு வலிப்பதாகக் கூறியுள்ளான், பிறகு ரத்த வாந்தி எடுத்துள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கே அவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இது குறித்த புகாரின் பேரில் வெர்மா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.