கோடநாடு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம்

இந்தியா சற்றுமுன்
06 July17 Supreme Court - 2026

கோடநாடு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளனர்.

கோடநாடு எஸ்டேட்டில் 2017ஆம் ஆண்டு கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறின. அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மாயமாகின. தொடர்ந்து ஜெயலலிதாவின் கார் ஒட்டுநர் கனகராஜ் உட்பட 5 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான சயான், மனோஜ், தெஹல்காவின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாம்வல் ஆகியோர் கடந்த 11-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி மீது புகார் கூறி, வீடியோ வெளியிட்டனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் டிராபிக் ராமசாமி சார்பில் கோடநாடு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப் பட்டது. அந்த மனுவில் முதலமைச்சர் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறை கோடநாடு வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது, கோடநாட்டில் கொள்ளை மற்றும் இரட்டைக் கொலை நடந்த வழக்கை சாதாரண குற்ற வழக்காகக் கருதக் கூடாது, இதை அரசியல் நோக்கம் கொண்டதாக கருதலாம். ஜெயலலிதாவின் மரணம் சந்தேகத்துக்குரியதாக கருதப்படும் நிலையில் இவ்வழக்கை மிக தீவிரத்தன்மை கொண்டதாக பார்க்க வேண்டியுள்ளது என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது டிராபிக் ராமசாமி மனுவில் போதிய விவரங்கள் இல்லை என்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் கூறியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.