
ஹைதராபாத்: தெலுகு சின்னத்திரை நடிகை நாக ஜான்சி கடும் மன அழுத்தத்தில், ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு வயது 21.
தெலுகு டிவி தொடர்கள் சிலவற்றில் நடித்த
ஜான்சி, சில மாதங்களாக போதிய வாய்ப்பின்றி இருந்துள்ளார். பின்னர் சொந்தமாக பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அவர், ஹைதராபாத்தில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டிற்கு வந்த அவரது சகோதரர் துர்கா பிரசாத் பலமுறை கதவை தட்டியும் ஜான்சி கதவைத் திறக்கவில்லையாம். எனவே அருகில் இருப்பவர்களிடம் இது குறித்து விசாரித்துள்ளார்.
பின்னர் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு சென்று பார்த்து போது, வீட்டிற்குள் ஜான்சி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதை அடுத்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. போலிஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
தற்கொலை செய்து கொண்ட நாக ஜான்சி, தூரத்து உறவுக்கார இளைஞர் ஒருவரை விரும்பியதாகவும், ஏதோ காரணத்தால், அவர் சில நாட்களாக மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காதல் தோல்வி
காரணமாக மனமுடைந்து ஜான்சி தற்கொலை
செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், நாக ஜான்சியின் மொபைல் போனையும் கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இளம் நடிகை விரக்தியில் தூக்கில் தொங்கியது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



