நான் எப்போது அதிரடி காட்டுவேன் என எனக்கே தெரியாது; அனுஷ்காவை விமர்சித்தவர்கள் வெட்கப்பட வேண்டும்: கோலி ஆவேசம்

kohli நான் எப்போது அதிரடியாக ஆடுவேன் என எனக்கே தெரியாதபோது, ஊடகங்கள் அதை தீர்மானிப்பது தவறு; என் ஆட்டத்துக்காக அனுஷ்காவை விமர்சித்தவர்கள் வெட்கப் பட வேண்டும் என்று ஆவேசமாக பதிலளித்துள்ளார் விராட் கோலி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்று வெளியேறியது. இப்போட்டியில் விராட் கோலி அதிரடியாக விளையாடி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது அவர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெறுப்பேற்றினார். கோலியின் மோசமான ஆட்டத்துக்கு அவரது காதலி அனுஷ்காவைக் காரணம் காட்டி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேலியும் கிண்டலும் செய்தனர். இதுபற்றி இதுவரை எதுவும் பேசாமல் இருந்த விராட் கோலி, இன்று மனம் திறந்து கருத்து தெரிவித்தார். ஐ.பி.எல்.லுக்காக இன்று தனது அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிகழ்ச்சியில் விராட் கோலி கலந்து கொண்டு பேசியபோது… அந்தத் தோல்விக்கு என் காதலி அனுஷ்கா காரணம் என்று விமர்சனம் செய்தது என்னை மிகவும் காயப்படுத்தியது. இவ்வாறு கூறுபவர்கள் அதற்காக வெட்கப்பட வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் இந்திய அணியின் பல வெற்றிகளில் நான் துணை நின்றிருக்கிறேன். அணியில் மற்ற வீரர்களைவிட நான் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் விளையாடியிருக்கிறேன். என்னைவிட சிறப்பாக செயல்பட்டவர்கள் யாரும் இல்லை என்றே நான் நினைக்கிறேன். ஒரு போட்டியில் அடைந்த தோல்விக்காக தொடர்ந்து வரும் எதிர்ப்புகள் எனக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது. இது, மக்கள் மீதான என் நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. ஒரு வகையில் இதுவும் நல்லதுதான். உங்களுடன் யார் இருக்கிறார், யார் இல்லை என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியும். என் கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில் விமர்சனங்கள் மிகவும் ஏமாற்றம் அடையச் செய்தது. என் அதிரடி எப்போது எனக்கு வரும் என்பது எனக்கே தெரியாதபோது ஊடகங்கள் அதை தீர்மானிப்பது வேடிக்கை. என் விவகாரத்தில் நான் இரண்டு போட்டிகளில் நன்றாக விளையாடவில்லை என்றால் அது என் ஃபார்மில் குறை. ஆனால், சில வீரர்களின் செயல்பாடு 10 போட்டிகளில் இரண்டில் சரியாக இருந்தால்கூட அவர்கள் ஃபார்முக்கு வந்ததாகக் கூறுகிறார்கள். அதனால், இந்த அளவுகோலில் நான் கவனம் செலுத்த மாட்டேன். குறிப்பிட்ட போட்டியில் எப்படி விளாசுகிறோம் என்பதைப் பொருத்துதான் அமையும் ..என்றார் அவர்.