ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை போன்று தேர்தல் பணி செய்ய வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தம் கட்சித் தொண்டர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை இப்போதே தொடக்கி உள்ளது தேசியவாத காங்கிரஸ் கட்சி. மகாராஷ்டிராவில் இந்தாண்டு இறுதிக்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் புனேவில் நடந்த தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் சரத்பவார் கலந்து கொண்டு, தொண்டர்களிடம் உரையாடினார். அப்போது அவர் மக்களவை தேர்தல் தோல்வியை பற்றி கவலைப்படாமல் சட்டப்பேரவை தேர்தலில் கவனம் செலுத்துமாறு கட்சியினரைக் கேட்டுக் கொண்டார்.
கட்சித் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்திக்க வேண்டும். அப்படி நீங்கள் செய்தால் தேர்தல் நேரத்தில் மட்டுமே எதற்காக உங்களுக்கு எங்களின் நினைவு வருகிறது என்று கேட்பதை வாக்காளர்கள் நிறுத்தி விடுவார்கள்.
பாஜக.,வுக்காக வாக்கு சேகரிக்கும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் பிரச்சார யுக்தியைப் பாருங்கள். ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் எப்படி பிரசாரம் செய்கிறார்கள் என பாருங்கள். அவர்கள் வரும் போது 5 வீடுகளில் ஒரு வீடு பூட்டி இருந்தாலும் மீண்டும் மீண்டும் வந்து, விஷயங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கிறார்கள். மக்களிடம் எப்படி தொடர்பில் இருக்க வேண்டும் என்பதை ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் நன்றாக தெரிந்து வைத்துள்ளனர்! இதே பாணியை நாமும் பின்பற்ற வேண்டும்!
மக்களவைத் தேர்தல் நேரத்தில் மகாராஷ்டிராவிலும், மத்தியிலும் பாஜக., வெற்றி பெறுவதையும், மீண்டும் ஆட்சிக்கு வருவதையும் தடுக்க பல வழிகளில் முயற்சி மேற்கொண்டவர் சரத் பவார். பாஜக.,வை வீழ்த்த காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கவும் கடும் முயற்சி செய்தார் சரத் பவார்.




