முலாயம் சிங் யாதவ்…! யாருக்கு வைத்த குறி..!?

Published:

mulayamsinghyadav - 2026

முலாயம் சிங் யாதவ்… 79 வயதாகும் மூத்த உறுப்பினர். இப்போது நாடாளுமன்றத்தில் அரசியல் செய்யும் மூத்த அரசியல்வாதி. இளைய தலைமுறையினர் தலையெடுத்து விட்டாலும், இன்னமும் ஒதுங்கிப் போகாத தனி ஆளுமையை இன்று ஒரே வார்த்தையில் நிரூபித்துவிட்டார்.

முலாயம், நிகழ்கால சகுனி என்பதை ஒவ்வொருவர் மனத்திலும் பதிய வைத்திருக்கிறார். அவருக்கு மோடி மீண்டும் பிரதமர் ஆக வரவேண்டும் என்று சொன்னது முக்கியமான விஷயமாக உலகுக்குத் தெரிந்தாலும், அவரது வார்த்தைகளில் உள்ளர்த்தம் பொதிந்தே இருந்தது. அது, தன் அருகில் இருந்த ஒரு பெண்மணியையும், தன் மகன் அருகில் இருக்கும் மற்றொரு பெண்மணியையும் சேர்த்தே கலவரப் படுத்தும் வாசகங்கள். இதில் அருகே இருந்த ஒரு பெண்மணி சோனியா தான் கலவரம் அடைந்ததை முகக்குறிப்பில் காட்டி விட்டார். அடுத்த கலவரக் குறிகள் நாளை முதல் உ.பி. மேடைகளில் எதிரொலிக்கும். அது மாயாவதியின் குரலாகவே இருக்கும்.

இந்த மக்களவையில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த மக்களவையிலும் உறுப்பினர்களாக வரவேண்டும் என்று வாழ்த்துச் சொல்வது ஒரு மரபு. அந்த மரபை ஒட்டியே முதலில் வாசகங்களைச் சொன்னாலும், அழுத்தம் திருத்தமாக மோடியையும் குறிப்பிட்டு, நீங்கள் இந்த முறை நன்றாகக் கொண்டு போயிருக்கிறீர்கள் என்று பாராட்டும் தெரிவித்து, அடுத்த முறையும் நீங்களே பிரதமராக வருவீர்கள் என்று நம்பிக்கையும் தெரிவித்தால், எதிர் அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் மகன் அகிலேஷும், கூட்டணி போட்டிருக்கும் மாயாவதியும் என்ன ஆவார்கள்?!

தனது தம்பி ஷிவ்பால் யாதவுக்காக தான் பெற்ற மகனையே ஒதுக்கி வைத்தவர்  முலாயம் சிங். தன் மகன் அகிலேஷ் முதலமைச்சராக இருந்தபோது பொதுமேடையில் வைத்தே அகிலேஷின் ஆட்சியை விமர்சித்தவர் முலாயம் சிங் யாதவ். கட்சியை நிறுவிய தன்னை கட்சியை விட்டே தூக்கப் பார்த்தவர் மகன் என்ற எண்ணம் ஒரு புறம் இருந்தாலும், தனது பரம எதிரியாக அரசியல் நடத்தி வந்த மாயாவதியை, தன் மகன் கூட்டணி வைத்துக் கொண்டு பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கவும் செய்வார் என்றால், அதைக் கேட்டுக் கொண்டு அவர் சும்மா இருப்பாரா என்ன?

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

எனவேதான், மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த மகன் அகிலேஷுக்கு ஒரு குட்டு வைப்பதற்காகவே, மோடிக்கு ஒரு ஷொட்டு வைத்திருக்கிறார்.  

நாளை தந்தையும் மகனும் சமாதானம் ஆனால் கூட, ஒரு போதும் மாயாவதியை பிரதமராக முலாயம் சிங் முன்னிறுத்த மாட்டார்! அப்போது என்ன நடக்கும்?

mulayam praises sonia - 2026

மாயாவதியின் பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் யாதவ்கள் வேற்றுக்கட்சிகளுக்கு வாக்களித்து மாயாவதியின் கனவைத் தவிடு பொடியாக்குவார்கள். மாயாவதியின் கட்சிக்காரர்களோ மாயாவதி பிரதமர் ஆக வேண்டுமே என்று சமாஜ்வாதி கட்சியை ஆதரிப்பார்கள். எனவே மொத்தத்தில் ஏமாறவப் போவது மாயாவதிதான்.!

எற்கெனவே உ.பி.யில், தன்னிச்சையாக காங்கிரஸைக் கழற்றிவிட்டு மாயாவதியுடன் கை கோத்த அகிலேஷ், இந்தத் தேர்தலுக்குப் பின்னர் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று கூறி தந்தைக்குக் கட்டுப்பட்டு மாயாவதியைக் கழற்றி விடுவார். எனவே இந்த விவகாரத்தில் அதிகம் பாதிக்கப் படுபவர்கள் மாயாவதியும் காங்கிரஸும்தான்!

mayavati akilesh - 2026

தற்போதைய மாறிவிட்ட சூழ்நிலையில், மம்தா பானர்ஜி முன்பு போல் 30 தொகுதிகள் எல்லாம் வெற்றி பெற இயலாது. மாநிலத்தில் நிலைமை சரியில்லை. மம்தாவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. ரவுடியிஸம் கட்டப்பஞ்சாயத்து எல்லாம் மக்களால் வெறுக்கப்பட்ட அரசியல்! எனவே, முலாயம் சிங் கணக்குப்படி மாயாவதி  வீழ்ச்சி அடைவார். அதே நேரம், மக்களவையில் சமாஜ்வாதி கட்சியே 3ஆவது பெரிய கட்சியாக உருவெடுக்கக் கூடும்.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

ஆக, ஒரே வாசகத்தில் ஒரு அரசியல் மாற்றத்தையே எழுதிவிட்டார் முலாயம்சிங் யாதவ்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img