நேதாஜி உறவினர்கள் நேருவால் உளவு பார்க்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்

nehru-subash-boseபுது தில்லி: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இறந்ததாகக் கூறப்பட்ட பின்னர், அவரது உறவினர்கள் அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவால் உளவு பார்க்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது நேதாஜியின் சகோதரர் மகனான சிசிர் குமார் போஸ், நெருங்கிய உறவினர் அமியாநாத் போஸ், நேதாஜியின் ஜெர்மனி நாட்டு மனைவி எமிலி சூசென்கல் ஆகியோர் உளவு பார்க்கப் பட்டுள்ளனர். அவர்கள், ஜவாஹர்லால் நேரு பிரதமராக இருந்த 1948ஆம் ஆண்டு முதல் 1968ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் உளவு பார்க்கப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் உளவுத்துறையின் வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு, அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அனுஜ் தர் என்னும் எழுத்தாளர் ‘இண்டியாஸ் பிக்கஸ்ட் கவர் அவ்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் நேதாஜியின் மர்ம மரணம் தொடர்பான இத்தகைய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேசிய ஆவணக் காப்பகத்தில் சில மாதங்களுக்கு முன்பு வரை பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த 2 முக்கிய கோப்புகளும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து அனுஜ்தர் கூறியபோது, ‘ரகசியமான இந்தக் கோப்புகள் இரண்டும் தவறுதலாக தேசிய ஆவணக் காப்பகத்துக்கு வந்துவிட்டன. இந்தக் கோப்புகள் முக்கியத் தகவல்களைக் கொண்டவை. ஏனெனில் அவற்றிலுள்ள சின்னச் சின்ன விஷயங்கள் கூட உன்னிப்பாகக் கவனித்து எழுதப்பட்டுள்ளன’ என்றார். உளவு பார்க்கப்பட்டது தொடர்பான கோப்புகள் பலவற்றில் உளவுத்துறை அதிகாரிகள் நேதாஜி குடும்பத்தினரின் தொலைபேசி உரையாடல்கள் குறித்து கையால் எழுதப்பட்ட ஆவணங்களாகக் காணப்படுகின்றன. அமியாநாத் போஸ் கல்கத்தாவில் வசித்தபோதும், தில்லி உள்ளிட்ட இந்திய நகரங்களிலும், வெளிநாடுகளுக்கு பயணம் சென்றபோதும் அவருடைய நடவடிக்கைகள் உளவு பார்க்கப்பட்டுள்ளது இந்தக் கோப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும், நேதாஜியின் ஜெர்மனி நாட்டு மனைவி எமிலி சூசென்கல், சிசிர்குமார் போஸ், வரலாற்று நிபுணர் லியோனார்டு கார்டன், ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்காவில் வசித்தவர்களுக்கு எழுதிய கடிதங்களும் உளவு பார்க்கப்பட்டுள்ளன. இந்தக் கடிதங்கள் அனைத்தும் மத்திய உளவுத்துறையால் பிரித்துப் பார்க்கப்பட்டிருப்பதுடன் அவை நகல் எடுக்கப்பட்டுள்ளன. நேதாஜி இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகும் எமிலி சூசென்கல் குறித்து எழுதும்போது நேதாஜியின் மனைவி என்பதை உளவுத்துறையினர் தவறாமல் குறிப்பிட்டுள்ளனர்.