என் உயிரினும் மேலான என் நாட்டுமக்களே… சுதந்திரம் கிடைத்து இத்தனை நீண்டகாலம் வரை, நாமனைவரும் எந்தப் போர் நினைவுச் சின்னத்துக்காக காத்திருந்தோமோ, அந்தக் காத்திருப்புக் காலம் நிறைவடைய விருக்கிறது. இது தொடர்பாக நாட்டுமக்களின் பேராவலும் உற்சாகமும் இருப்பது இயல்பான விஷயம் தான். NarendraModiAppஇல் கர்நாடக மாநிலத்தின் உடுப்பியைச் சேர்ந்த ஸ்ரீ ஓங்கார் ஷெட்டி அவர்கள் தேசிய போர் நினைவுச் சின்னம் உருவாக்கம் அடைந்திருப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நம் பாரத நாட்டில் இதுவரை எந்த ஒரு தேசிய அளவிலான போர் நினைவுச் சின்னமும் ஏற்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் ஒருசேர அளிக்கிறது. தேசத்தின் பாதுகாப்பிற்காகத் தங்கள் உயிர்களையே துச்சமென மதித்து அர்ப்பணம் செய்த வீரர்களின் தீரக்கதைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் நினைவுச் சின்னமாக அது இருக்கவேண்டும் என்று நான் விரும்பினேன். அப்படிப்பட்ட ஒரு நினைவுச் சின்னம் நாட்டில் கண்டிப்பாக ஏற்படுத்தப்பட்டே ஆக வேண்டும் என்று நான் உறுதி பூண்டேன்.

நாங்கள் தேசிய போர் நினைவுச் சின்னத்தை நிர்மாணம் செய்யும் தீர்மானத்தை மேற்கொண்டோம்; இந்த நினைவுச் சின்னம் இத்தனை குறுகிய காலகட்டத்தில் தயாராகியிருப்பது எனக்கு மட்டில்லாத மகிழ்ச்சியை அளிக்கிறது. நாளை அதாவது பிப்ரவரி மாதம் 25ஆம் தேதியன்று நாம் கோடிக்கணக்கான ந்மது நாட்டு மக்களுக்கும் நமது இராணுவத்துக்கும் இந்த தேசிய இராணுவ நினைவகத்தை அர்ப்பணம் செய்வோம். தேசம், இராணுவத்திற்கு தான் பட்டிருக்கும் கடனைத் திரும்பச் செலுத்தும் வகையிலான மிகச் சிறிய முயற்சியாக இது அமையும்.

தில்லியின் இருதயம் என்று சொன்னால் அது இண்டியா கேட், அமர் ஜவான் ஜோதி ஆகியன இருக்குமிடம் தான். அதற்கு மிக அருகிலேயே, இந்தப் புதிய நினைவகம் உருவாகியிருக்கிறது.

இது தேசிய இராணுவ நினைவகமாக நாட்டு மக்கள் மனங்களில் இடம் பிடிக்கும், ஒரு புனித தலத்திற்கு ஒப்பாக இது அமையும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை இருக்கிறது. தேசிய இராணுவ நினைவகம், சுதந்திரத்திற்குப் பிறகு உச்சகட்ட தியாகத்தைப் புரிந்த வீரர்களின் பொருட்டு தேசத்தின் நன்றியறிதலைக் குறிக்கின்றது.

நினைவகத்தின் வடிவமைப்பு நமது அமரர்களான வீரர்களின் வெல்லமுடியாத சாகசத்தைக் காட்சிப்படுத்துகிறது. தேசிய இராணுவ நினைவகத்தின் கருத்தாக்கம், 4 பொதுமைய வட்டங்கள் அதாவது 4 சக்கரங்களை மையமாகக் கொண்டது; இதிலே ஒரு வீரனின் பிறப்பு தொடங்கி, தியாகம் வரையிலான பயணம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அமர் சக்கரத்தின் ஜ்வாலை, தியாகியான வீரனின் அமரத்துவத்தைக் குறிக்கிறது. இரண்டாவது சக்கரம், வீரத்தைக் குறிக்கும் சக்கரம், இது வீரர்களின் சாகசத்தையும், தீரத்தையும் வெளிப்படுத்துகிறது.

இந்தக் காட்சிக்கூடத்தின் சுவர்களில் வீரர்களின் வீரதீர சாகசச் செயல்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இதன் பின்னர் தியாகச் சக்கரம்; இந்தச் சக்கரம் வீரர்களின் தியாகத்தைச் சுட்டிக் காட்டுகிறது.

இதில் தேசத்திற்காக சர்வபரித்தியாகத்தை அளித்த வீரர்களின் பெயர்கள் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருக்கும். இதன் பின்னர் ரக்ஷக் சக்கரம், பாதுகாப்பினைக் குறிக்கிறது. இந்தச் சக்கரத்தில் அடர்ந்த மரங்களின் வரிசை இருக்கிறது. இந்த மரங்கள் வீரர்களைக் குறிக்கின்றன, தேசத்தின் குடிமக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இது சொல்லும் சேதி என்ன தெரியுமா?……. நாட்டின் எல்லைகளில் ஒவ்வொரு கணமும் வீரர்கள் தயாராக இருக்கிறார்கள், ஆகையால் நாட்டுமக்கள் பாதுகாப்பாக உணரலாம் என்பது தான்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தோமேயானால், தேசிய இராணுவ நினைவகத்தை நாம் எப்படி அடையாளம் கண்டு கொள்ளலாம் என்றால், அந்த இடத்தில் நாட்டின் மகத்துவம் நிறைந்த தியாகிகள் பற்றிய தகவல்கள் கிடைக்கும், நமது நன்றியறிதல்களைக் காணிக்கையாக்கவும், அந்த தியாகிகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளவும் மக்கள் அங்கே வருவார்கள்!

தேசத்திற்காக தங்கள் உயிரை அர்ப்பணித்தவர்கள் பற்றிய தியாகக் கதைகள் இங்கே இருக்கும்; இவற்றை நாம் கண்ணால் பார்த்து, உணர்வால் உயிர்க்கும் போது, நாம் வாழ, நாம் பாதுகாப்போடு இருக்க, நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்க இவர்கள் தங்களையே தியாகம் செய்தார்கள் என்ற உணர்வு நம் உயிர் மூச்சுக்களில் நிறையும். நாட்டின் முன்னேற்றத்தின் பொருட்டு நமது ஆயுதப்படையினர், காவல்துறையினர், துணை இராணுவப் படையினர் ஆகியோரின் மகத்தான பங்களிப்பினை, சொற்களில் வடிப்பது என்பது இயலாத ஒன்று.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேசிய காவல்துறை நினைவகத்தை தேசத்திற்கு அர்ப்பணம் செய்யும் பெரும் பேறு எனக்குக் கிடைத்தது. எல்லாக் காலங்களிலும் பாதுகாப்பிலே ஈடுபட்டிருக்கும் நமது காவல்துறையைச் சார்ந்த ஆண்கள்-பெண்களிடத்தில் நாம் நன்றியோடு இருக்கவேண்டும் என்ற உணர்வின் வெளிப்பாடாகவே இந்த நினைவகமும் உருவாக்கப்பட்டது.

நீங்கள் கண்டிப்பாக தேசிய இராணுவ நினைவகத்துக்கும், தேசிய காவல்துறை நினைவகத்துக்கும் செல்வீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அந்த இடங்களுக்கு நீங்கள் எப்போது சென்றாலும், அங்கே நீங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளுங்கள்; இதனால் மற்றவர்களும் இவற்றைப் பார்த்து உத்வேகம் பெற்று, இந்தப் புனிதமான இடங்களுக்குச் செல்லும் ஆர்வம் ஏற்படும்.

மனதின் குரல் – 53வது பகுதி
24.2.2019 அன்று வானொலியில் ஒலிபரப்பானதன் தமிழ் வடிவம்
ஒலிபரப்பு: அகில இந்திய வானொலி, சென்னை

தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...