மேக் இன் இண்டியாவை கேலி செய்கிறார் ராகுல்! விரைவில் ராணுவம் ‘மேட் இன் அமேதி’ துப்பாக்கிகளை பயன்படுத்தும்! : சீறிய மோடி!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

modi in amethi - 2026

ஏகே 203 துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலையை உத்த ரபிரதேசத்தில் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்த துப்பாக்கிகள் உறுதுணையாக இருக்கும் என்றார். அப்போது அவர், மேட் இன் அமேதி துப்பாக்கிகளை நம் ராணுவம் விரைவில் பயன்படுத்தப் போகின்றது என்றார்!

அமெதி தொகுதியைச் சேர்ந்த ராகுல், மேட் இன் இந்தியா பற்றி அவதூறாகப் பேசி வரும் நிலையில், அமேதி தொகுதியிலேயே ஒரு தொழிற்சாலையை தொடங்கி வைத்து மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

பிரதமராக, முதன் முறையாக உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதிக்குச் சென்றார் பிரதமர் மோடி! அங்கே, 538 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

உத்தரப்பிரதேசத்தின் கோர்வாவில் கலாஷ்னிகோவ் துப்பாக்கி தயாரிக்கும் தளவாடத் தொழிற்சாலையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ரஷ்யாவுடன் கையெழுத்தான ஒப்பந்தப்படி அந்தத் தொழிற்சாலையில் இந்திய பாதுகாப்புப் படை வீரர்களுக்குத் தேவையான ஏழரை லட்சம் ஏ.கே. 203 ரக தாக்குதல் துப்பாக்கிகள் தயாரிக்கப்படவுள்ளன. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாராகும் இது ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளை விட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் கொண்டது.

இந்த நிகழ்வில், உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஏ.கே.203 ரக துப்பாக்கி தயாரிப்புக்காக இந்தியா-ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது,. இந்தப் பெருமை பிரதமர் மோடியையே சாரும்! அடுத்து வரும் 3 ஆண்டுகளில் ஏகே 203 ரைஃபில்களுக்கான அனைத்து உதிரிபாகங்களும் உள்நாட்டிலேயே தயாராகும் என்றார். கலாஷ்னிகோவ் ஆலை திறப்பை ஒட்டி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் சிறப்பு செய்தியை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமேதி அந்த மேடையில் வாசித்தார்.

பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த தேர்தலில் நாங்கள் இங்கே தோல்வி அடைந்தாலும், எங்கள் ஓய்வு ஒழிச்சல் இல்லாத பணிகளால் அமேதி தொகுதி மக்களின் இதயங்களை வென்றுவிட்டோம் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசியதாவது…

அமேதி தொகுதியில் வாக்குகளைக் கொண்டு மக்களிடையே தாம் பாகுபாடு பார்க்க வில்லை! இனி அமேதி என்பது அங்கு வந்த தலைவர்களைக் கொண்டு அடையாளப் படுத்தப்படாமல் வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு அடையாளப் படுத்தப்படும்!

நக்சலைட்டுகள், பயங்கரவாதிகளை எதிர்த்து போராடும் நமது பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ஏகே 203 ரக துப்பாக்கி பெரும் உறுதுணையாக இருக்கும்!

2009ஆம் ஆண்டில், ஒரு லட்சத்து 86 ஆயிரம் குண்டுதுளைக்காத ஜாக்கெட் கேட்டது நம் ராணுவம். ஆனால், 2009-2014 ஐந்து ஆண்டுகளில் ஒன்று கூட வாங்கப் படவில்லை! ஆனால், நமது ஆட்சியில் இந்த நாலரை ஆண்டுகளில் 2.30 லட்சம் புல்லட் புரூப் ஜாக்கெட்டுகள் வாங்கப்பட்டு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

நவீன ஆயுதங்களுக்காகவும், போர் விமானங்களுக்காகவும் நமது வீரர்களை முந்தைய அரசு காக்க வைத்துவிட்டது.

சைக்கிள் தயாரிப்பு ஆலைக்கு நிலம் கையகப்படுத்தி அதை தங்களின் பெயர்களுக்கு மாற்றிக் கொண்டது.

அமேதி தளவாடத் தொழிற்சாலையில் என்ன ஆயுதம் தயாரிப்பது என்றே தெரியாமல் முந்தைய அரசு இருந்தது. நமது வீரர்கள் புல்லட் புரூப் கவசமின்றி எதிரிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

ரபேல் போர் விமானங்கள் குறித்து சொந்த விருப்பு வெறுப்பின் அடிப்படையில் சுயநல நோக்கோடு காங்கிரஸ் எதிர்க்கிறது. ஆனால் விரைவில் இந்திய வானில் ஐந்தாம் தலைமுறை ஜெட் பறக்கும் பாருங்கள்.!

ரபேல் விமான ஒப்பந்தத்தினை வெகு காலம் நீட்டித்து இழுத்தனர். இப்போதும் கூட அவர்கள் ரபேல் ஒப்பந்தத்தை முடிக்க விடக் கூடாது என்று தடுக்கின்றனர். தாங்கள் பலன் பெறுவதற்காக ரபேல் வாங்குவதைத் தடுக்க முயற்சிக்கின்றனர். ஆனால் விரைவில் ரபேல் விமானம் நம் வானில் பறக்கும்.

இவ்வளவு குறுகிய காலத்தில் ஏகே 203 ரக துப்பாக்கி தயாரிப்பை சாத்தியமாக்கியதற்காக நண்பர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நன்றி சொல்கிறேன்… என்று குறிப்பிட்டார் மோடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.