பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் கூடாரங்களை நோக்கி துல்லியத் தாக்குதல் தொடுத்த இந்திய ராணுவத்தின் செயலை கிண்டல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள், பாகிஸ்தானின் ஆதரவாளர்களான காங்கிரஸ் கட்சியினர்.
இது நாட்டு மக்களை மத ரீதியாக பிரித்துக் கொண்டிருக்கிறது என்பதை காங்கிரஸும் பாஜக.,வும் உணரவில்லை!
பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்திய ராணுவத்தின் நடவடிக்கையை கிண்டல் செய்தும் பலர் தங்களது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படி கருத்து சொல்பவர்கள் இஸ்லாமியர்களாகவும், அவர்களிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்திருக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் பின்புலம் கொண்டவர்களுமாகவே இருப்பதால், இந்தப் போக்குக்கு எதிர்ப்பானவர்கள் ஓர் அணியில் மக்களைத் திரட்டி விடுகிறார்கள். இது நிச்சயமாக நாட்டை மதரீதியாக பிளவுபடுத்தும் வழக்கமான காங்கிரஸ் உத்தி என்ற கருத்துகள் உலா வருகின்றன.
விமானப்படையின் அதிரடி தாக்குதலை அரசியலாக்கக் கூடாது என ஆளும்கட்சி தரப்பிலும், எதிர்க்கட்சிகள் தரப்பிலும் கூறிக் கொண்டாலும், இருதரப்பும் அதனைக் கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தனது தோல்வியை மறைக்க, தற்போதைய மோடி அரசின் மீது குற்றம் சொல்வதற்குப் பதிலாக, ராணுவ நடவடிக்கையையும், ராணுவத்தின் நம்பகத்தன்மை மீதும் குற்றம் சாட்டுவது, தேசத்தை நேசிக்கும் பற்றாளர்களுக்கு கடும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
இந்நிலையில், ராணுவத்துக்கு தேவையான உபகரணங்கள் வாங்கிக் கொடுத்து, வெற்றியை ஈட்டும் நிலையில், அது பற்றி தாங்கள் பெருமை அடையக்கூடாது என்பதை எவர் சொன்னார்கள்?! இயல்பாகவே நாங்கள் எங்கள் சாதனையாகச் சொல்வதில் தவறில்லையே என்கிறார்கள் பாஜக.,வினர். அதனால், மோடியின் காரணத்தால் தான் இத்தகைய வெற்றி கிடைத்திருக்கிறது என்று சொல்வதை அரசியல் பிரசாரம் என்கிறது காங்கிரஸ்.
அதனால் ஒவ்வொரு நாளும் ராணுவத்தின் செயல்பாடு மீதே தனது சந்தேகத்தையும் கேள்விகளையும் முன்வைத்து அரசியல் செய்து வருகிறது. இப்போது பயங்கர வாதிகளின் சாவு எண்ணிக்கை தொடர்பாக இருதரப்பும் ஒவ்வொரு குற்றச்சாட்டை முன்வைக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் அமைச்சராக உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நண்பருமான சித்து, “ 300 பயங்கரவாதிகள் உயிரிழப்பு ஆம்? இல்லை?. நோக்கம் என்ன?. நீங்கள் பயங்கரவாதத்தை வேரறுத் தீர்களா? அல்லது மரத்தின் வேரறுத்தீர்களா? இதில் தேர்தல் தந்திரம்? வெளிநாட்டு எதிரிக்கு எதிராக சண்டையிடுகிறோம் என்ற போர்வை ஏமாற்று செயல். இந்திய ராணுவத்தை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள். இதுவே இந்திய தேசத்தை புனிதப்படுத்தும்” என கூறியுள்ளார்.
இந்திய விமானப்படை தாக்குதலில் மரங்கள் அழிந்துள்ளது இது சுற்றுச்சுழலுக்கு எதிரான பயங்கரவாதம் என பாகிஸ்தான் வேறு, சித்துவின் கருத்தைப் பிரதிபலித்து ஐ.நா.வில் புகாராகக் கூறியுள்ளது.
இந்திய விமானப்படையின் தரப்பில், உளவுத்துறை பயங்கரவாதிகளின் நடமாட்டம்
தொடர்பாக தகவல் அளித்தது. பயங்கரவாத முகாம்கள் உறுதி செய்யப்பட்டன. பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காத நிலையில் நாங்கள் எடுத்தோம்! தாக்குதல் தொடுப்பதுதான் எங்கள் வேலை! எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என கணக்கெடுப்பது எங்கள் வேலை இல்லை என்று கூறியது.
இருப்பினும், பாஜக., தலைவர் அமித்ஷா பேசுகையில், 200க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பர் என்று கூறியிருந்தார். எனவே இதுவும் ஒரு பிரச்னைக்கு உரிய கருத்தாக ஊடகங்களில் முன்வைக்கப் பட்டது.
இத்தகைய கருத்துகளால், சித்துவை காங்கிரஸார் கண்டிக்கிறார்களோ இல்லையோ… காங்கிரஸ் மேலிடத்தின் கருத்தை பிரதிபலிப்பதால், சித்துவுக்கு காங்கிரஸார் பாராட்டுகளைத்தான் தெரிவிக்கிறார்கள். இதுவே அம்மாநில முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்கை மானஸ்தனாக முன்னிறுத்தி, ஆட்சியில் இருந்தே கழன்று கொள்ள வைக்கப் போகிறது!