மனைவி மருந்து வாங்க 2 மாதக் குழந்தையை விற்ற தந்தை

மல்காங்கிரி ஒடிஸா மாநிலம், மல்காங்கிரி மாவட்டத்தில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மனைவிக்கு மருந்து வாங்க பணம் இல்லாததால், 2 மாத ஆண் குழந்தையை தந்தை விற்றுள்ளார். இதனை குழந்தைகள் நலக் குழு சனிக்கிழமை தெரிவித்தது. இதுகுறித்து அந்தக் குழுவின் மாவட்டத் தலைவர் சஞ்சுக்தா பிரதான் தெரிவித்தபோது, ஒடிஸா மாநிலம், சிட்டப்பள்ளியைச் சேர்ந்த சுக்ரா முதுலியின் மனைவி துமுசி முதுலி. சுக்ரா தன் 2 மாத ஆண் குழந்தையை சமூக சுகாதார அமைப்பைச் சேர்ந்த ஊழியர் ஒருவரிடம் கடந்த பிப்ரவரி மாதம் விற்றதாக தகவல் கிடைத்ததையடுத்து இந்த விவகாரத்தில் குழந்தைகள் நலக் குழுவினர் விசாரணை நடத்துமாறு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் குமார் ரெட்டி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, அவர்களிட விசாரணை மேற்கொண்டபோது, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் திட்டம் அல்லது இந்திரா அவாஸ் யோஜனா திட்டம் (வீடு வழங்கும் திட்டம்) உள்ளிட்ட அரசின் எந்தச் சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதும், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட தன் மனைவிக்கு மருந்து வாங்க பணம் இல்லாததால், சமூக சுகாதார அமைப்பிடம் குழந்தையை விற்றதாக சுக்ரா முதலி கூறினார். இதற்காக இவருக்கு, அந்த ஊழியர் ரூ.700 பணமும், 50 கிலோ அரிசியும் வழங்கியதாக அவர் தெரிவித்தார். இவர்களுக்கு அரசின் சலுகைகள் கிடைக்கப் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். அதுவரை அந்தக் குழந்தை, சமூக சுகாதார அமைப்பிடமே இருக்கும் என்றார் பிரதான்.