ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ.வைப் பார்த்து கண் ஜாடை: இளைஞர் கைது!

mla-aap-delhiபுது தில்லி: ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ. அல்கா லாம்பாவைப் பார்த்து கண் ஜாடை செய்த ஒரு ஆத்மியை (இளைஞரை) போலீசார் கைது செய்துள்ளனர். தில்லியில் உள்ள புகழ்பெற்ற கவிஞர் மிர்சா காலிஃப் பாரம்பரிய மாளிகையை, ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ. அல்கா லாம்பா ஆய்வு செய்தார். அப்போது, இளைஞர் ஒருவர் அவரிடம் கண் ஜாடை காட்டி, தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அந்த இளைஞரை, அல்கா லாம்பா கன்னத்தில் அறைந்து விட்டார். இதையடுத்து, ஆம் ஆத்மி தொண்டர்கள் அவரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து அல்கா லாம்பா கூறுகையில், ”அந்த இளைஞர் என்னைப் பார்த்து கண் ஜாடை செய்து சைகை காட்டினார். என்னை தவறான வகையில் பார்த்தார். அந்த இளைஞர், நகராட்சி மன்றம் அருகே என்னை நெருக்கிவந்தார். உடனடியாக நான் அவரின் கன்னத்தில் அடித்து விட்டேன். இதை அடுத்து அந்த இளைஞர் அங்கிருந்து ஓடத் தொடங்கினார். ஆனால் அதற்குள் ஆம் ஆத்மி தொண்டர்கள் அவரை விரட்டிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசாரிடம் அவர், தான் மனநிலை சரியில்லாதவர் என்று கூறினார். ஆனால், அதற்கு மருத்துவ சிகிச்சை பெற்று வருவதற்கான சரியான ஆவணங்களை அவருடைய பெற்றோர் ஒப்படைக்கவில்லை. அதனால், போலீசாரிடம் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்” என்றார். இந்தச் சம்பவம் குறித்து ட்விட்டரிலும் பதிவு செய்துள்ளார் அல்கா லம்பா. இந்நிலையில், அந்த இளைஞர், பால்ஜீத் நகரைச் சேர்ந்த ராஜேஷ் என்பது தெரியவந்துள்ளது என்று கூறிய போலீசார்,இது குறித்து விசாரணை செய்து வருவதாகத் தெரிவித்தனர்.