சத்தீஸ்கரில் நக்ஸல் தாக்குதல்: ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை

புது தில்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்களின் தாக்குதலில் 7 போலீஸார் கொல்லப்பட்ட சம்பவம், டிரக்குகள் எரிக்கப்பட்ட சம்பவம் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். தில்லியில் உள்ள ராஜ்நாத் சிங்கின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அமைச்சரவைக் கூட்டத்துக்கு ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார். நிதியமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் சத்தீஸ்கர் தாக்குதல், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது அமர்வு, நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதல் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். அந்தச் சூழ்நிலையை கையாளுவதற்கு சத்தீஸ்கர் மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு சார்பில் செய்து கொடுப்பது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மேலும், பாதுகாப்புப் படையினருக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ள மாவோயிஸ்டுகளைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். நாடாளுமன்றக் கூட்டத்தொடர்: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது அமர்வு, வரும் 20-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் மத்திய அரசு பின்பற்ற வேண்டிய உத்திகள் குறித்து அமைச்சர்கள் ஆலோசித்தனர். மேலும், நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் முன்னெடுப்பது குறித்தும் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.