தூத்துக்குடி அண்ணா நகரில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில், 3 பேர் காயம் அடைந்துள்ளனர். போராட்டக்காரர்களின் கல்வீச்சில் காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் காயம் அடைந்தார். கல்வீச்சாளர்களை கலைக்க போலீசார் துப்பாக்கியால் சுட்டதாக தகவல் வெளியானது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கலைந்து போகுமாறு எச்சரிக்கை விடுத்த போலீசார் மீது இன்றும் கற்கள் வீசப்பட்டதால் தடியடி நடத்தப்பட்டது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் இன்று வந்தார். அப்போது மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், ஆட்சியரை முற்றுகையிட்டனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியான 11 பேரின் பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். கல்வீசி தாக்குபவர்கள் மீது போலீஸார் ரப்பர் குண்டால் சுட்டனர்.
பல வீதிகளில் ஆங்காங்கே மொத்தமாகக் கூடி நிற்கும் மக்கள் காவல்துறை மீது சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் கூட்டத்தை கலைக்க போலீஸார் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.




