ஜனதா பரிவார்: இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு?

புது தில்லி: ஜனதாக் கட்சிகள் இணைந்த ஜனதா பரிவார் இன்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய ஜனதா கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஐக்கிய ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட 6 கட்சிகளை ஒன்றிணைத்து, ஜனதா பரிவார் – ஜனதா குடும்பம் என புதிய கட்சி குறித்து, இன்று சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. புதிய கட்சி பற்றிய அறிவிப்பு வெளியாகும் முன், முலாயம் சிங் யாதவ் வீட்டில் நடைபெறும் கூட்டத்தில் நிதீஷ்குமார், சரத் யாதவ், ஐ.ஜ.கட்சியின் பொதுச் செயலர் கே.சி.தியாகி, மதசார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் தேவகவுட, ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், சமாஜவாதி கட்சித் தலைவர் கமல் மொரார்கா, இந்திய தேசிய லோக் தள கட்சித் தலைவர் துஷ்யந்த் செளதாலா, முலாயம் சிங் யாதவின் சகோதரர் ராம் கோபால் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கட்சிக்கு, சமாஜவாதி ஜனதா கட்சி என்றோ சமாஜவாதி ஜனதா தளம் என்றோ பெயரிட முடிவு செய்யப்பட்டதாம். அக்கட்சியின் சின்னமாக சமாஜவாதி கட்சியின் சைக்கிள் சின்னத்தையே அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.