
ராம நவமி தினமான ஏப் 6-ம் தேதி பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.
மானாமதுரை காரைக்குடி அறந்தாங்கி பட்டுக்கோட்டை திருத்துறைப்பூண்டி திருவாரூர் மயிலாடுதுறை கடலூர் விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக வண்டி எண் 16103/16104 ராமேஸ்வரம் – தாம்பரம் தினசரி விரைவு ரயில் 06.04.2025 ஞாயிறு முதல் இயக்கப்பட உள்ளது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி புதிய ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைக்கிறார். மேலும் திருவனந்தபுரம் மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் வரை நீட்டித்து இயங்கும். ஆனால் பலரும் எதிர்பார்த்த எர்ணாகுளம் செங்கோட்டை மதுரை ராமேஸ்வரம் ரயில் இயக்குவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இது, கேரளா தமிழக மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராம நவமி தினமான ஏப்ரல் 6-ம் தேதி பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.
பாம்பன் புதிய ரயில் பால திறப்பு விழா, ஏப். 6-ம் தேதி ராம நவமியன்று ராமேஸ்வரத்தில் நடக்கவுள்ளது. இந்தத் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் ரயில் தூக்குப் பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் விரிசல் காரணமாக, பாலத்தின் அருகிலேயே புதிய ரயில் பாலம் 2019 மார்ச் 1-ல் பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். ரூ.535 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாலத்தின் பணிகளை கடந்த நவம்பர் மாதம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வுசெய்து, சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, அவர் சுட்டிக்காட்டிய பணிகள் சரி செய்யப்பட்டன.
பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதற்கான பணிகளை தெற்கு ரயில்வே தீவிரப்படுத்தி உள்ள நிலையில், ராமேசுவரம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள், பாம்பன் புதிய ரயில் பாலத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏப்.6-ம் தேதி ராமநவமியன்று பாம்பன் புதிய ரயில் பாலத்தைத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது.
மேலும், அன்று ராமேஸ்வரத்திலிருந்து புதிய ரயில் சேவையைத் தொடங்கவும் வாய்ப்புகள் உள்ளன. விழாவில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். இதற்காக ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே விழாவுக்கான மேடை அமைக்கப்படும்.
ராமேஸ்வரம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் செப்டம்பர் மாதத்துக்குள் முழுமையாக நிறைவடைந்துவிடும். மேலும், பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்றுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்.
ராமேஸ்வரம்- தனுஷ்கோடி இடையே புதிய ரயில் பாதை அமைப்பதில் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினை இருப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் புதிய ரயில் பாதைக்கான நிலங்களைக் கையப்படுத்த வேண்டும். இதனால், தனுஷ்கோடிக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தாமதமாகும் – என்று அவர் கூறினார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி ஏப்ரல் 6ம் தேதி ராமேஸ்வரம் வருவது உறுதியாகி உள்ளதாக இன்று ரயில்வே துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் ஆறாம் தேதி மதியம் காலை 11 மணி ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு பின்னர் நடக்கும் விழாவில் பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைத்து தாம்பரம் – ராமேஸ்வரம் – தாம்பரம் புதிய ரயில் சேவை துவக்கி வைப்பார் என்பது உறுதியாகி உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராமேஸ்வரம் பாம்பன் பாலம் திறக்கும் போது, தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் எர்ணாகுளம் ஆலப்புழா கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் விருதுநகர் காரைக்குடி மார்க்கமாக ராமேஸ்வரத்திற்கு புதிதாக ஒரு ரயில் இயக்கப்படும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த ரயில் இயக்குவதாக இந்த அறிவிப்பும் இல்லை. இது நெல்லை தென்காசி விருதுநகர் சிவகங்கை மாவட்டம் மக்களிடையும் கேரள மக்களிடையும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்பு மீட்டர் கேஜ் ரயில் பாதையில் செங்கோட்டை ராமேஸ்வரம் இடையே ஒரு ரயில் இயக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை மீண்டும் இயக்கவும் கொல்லம் செங்கோட்டை கோவை வழித்தடத்திலும் கொல்லம் செங்கோட்டை சென்னை இடையே மேலும் ஒரு புதிய ரயிலையும் இயக்கவும் தென் மாவட்ட மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் கல்லூரி மாணவர்கள் வர்த்தகர்கள் பொதுமக்கள் செங்கோட்டையிலிருந்து ராஜபாளையம் மதுரை வழியாக பெங்களூர் மைசூருக்கு தினசரி ரயில் இயக்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் ராமேஸ்வரம் மதுரை விருதுநகர் செங்கோட்டை ரயில் வழித்தடத்தை இருவழிப்பாதையாக மாற்றவும் தென்னக ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த திட்டங்கள் நிறைவேறுமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்