கோடை விடுமுறைக்கு பின் நாளை உச்ச நீதிமன்றம் மீண்டும் இயங்க உள்ளது. அயோத்தி நில விவகாரம், ரபேல் சீராய்வு மனு, ராகுல் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் விசாரணைக்கு வர உள்ளன.
அயோத்தி நில விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வதற்காக 3 பேர் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. இந்த குழுவுக்கு, ஆகஸ்ட் 15 வரை மத்தியஸ்தம் செய்ய நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
அதேபோல், பிரான்சிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை மத்திய அரசு கொள்முதல் செய்வதை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு டிசம்பர் 14ம் தேதி தள்ளுபடி செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் வக்கீல் பிரசாந்த் பூஷன் ஆகியோர் தாக்கல் செய்த சீராய்வு மனுவும் விரைவில் விசாரணைக்கு வருகிறது.
இது தவிர, பிரதமர் மோடியை காவலாளியே திருடன்’ என உச்ச நீதிமன்றம் தெரிவித்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் குறிப்பிட்டதை எதிர்த்து பாஜ எம்பி மீனாட்சி லெஹி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு கூறப்பட உள்ளது.
மேலும், காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ எதிர்த்து வழக்கறிஞரும், பாஜ தலைவர்களில் ஒருவருமான அஸ்வினி உபாத்யாய் தொடர்ந்த பொதுநலன் வழக்கிலும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூற வேண்டியுள்ளது.



